சமீபத்திய பதிவுகள்

ஈழம் அவசியமா? – அவசரமா?!

>> Sunday, June 28, 2009

 ஈழம் அவசியம் – அவசரம்!

  •  

eelamavasijamகடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.

'30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்' என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. 'சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள்.

 'ஐந்தாம் யுத்தம்' கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று 'தமிழீழத்தில்' தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை.

அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்….

1. 'கூடாரங்களைப் பிரியுங்கள்!'

ஈழத் தமிழரின் இன்றைய பெயர், 'கூடார மக்கள்'. ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண் டோவின் கணக்கின்படி, 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சும்மா ரோட்டில் கிடத்தாமல் கூடாரங்களில் இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! வாஷிங்டன் மனித உரிமைக் காப்பகம், 'இவை தற்காலிகக் குடியிருப்புகள் அல்ல; சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்' என்கிறது. தினமும் இங்கு மக்கள் செத்து விழுகிறார்கள்.

கழிவறை வசதியைக்கூடச் செய்து தர மறுத்துவிட்டது சிங்கள அரசு. 'கக்கூஸ்கள் அமைக்கப்படாததை மக்கள் ஐ.நா. சபையிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொல்லிவிட்டார், மீள் குடியேற்றத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன். 'பசியில் இறந்தாலும் ஐ.நா-வே பொறுப்பு' என்று சொல்லிவிட்டார்கள். 'இந்த இடத்தில் இருந்து எங்களை விட்டால் போதும். எங்களது வீடுகளுக்குப் போக அனுமதித்தால் போதும்' என்று கெஞ்சுகிறார்கள் மக்கள்!

2. காணவில்லை… காணவில்லை!

ஒரு குழந்தை காணாமல் போனால் இங்கு விளம்பரங்கள், போலீஸ் விசாரிப்புகள், தனிப் படைகள் என எத்தனையோ முஸ்தீபுகள். ஆனால், அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன கடத்தல்கள். குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதால்தான் கடத்தல்கள் எளிதாக நடக்கின்றன.

இதில் பெண்களும் சிறுவர் களும்தான் அதிகம் காணாமல் போகிறார்கள். ஒரு முகாமில் 870 சிறுவர்கள் அநாதைகளாக இருக்கிறார் கள். அவர்களுக்கென யாருமே இல்லை. மருத்துவமனைக்கோ, பக்கத்து முகாமுக்கோ சம்பந்தப்பட்டவர்களை அனுப்பிப் பார்க்க அனுமதித்தால், உறவினர் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவாவது முடியும். அதற்கும் அனுமதி இல்லை. இப்படிக் காணாமல் போன சுமார் 20 ஆயிரம் மக்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்!

3. வெள்ளை அறிக்கை

நீண்ட கால மரணங்களும் இழப்புகளும் கொண்டது ஈழத்துப் போராட்டம். 1983 முதல் 2001 வரை இறந்த வர்கள் ஒரு லட்சம் பேர். யாழ்ப்பாணம் தொடங்கி முல்லைத் தீவு வரை மொத்தமாக நாசமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துச் சொல்லியிருக்கிறது. வட கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 34 ஆயிரம் வீடுகள் சேத மானதாகவும் சொல்கிறது அடுத்த புள்ளிவிவரம். இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அழிவுகள்தான் உச்சபட்சம். தமிழர் வாழும் கிராமங்கள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்ட நிலை. இப்படி தமிழர் பகுதிகள் அத்தனையும் கணக்கிட்டால் பாழடைந்த வீடுகள் எத்தனையோ?

முதல்கட்டமாக… பாதிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலங்கள் குறித்த தகவல்களுடன் இறந்தவர், இருப்பவர், இதில் உடல் ஊனமானவர் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளிவந்தாக வேண்டும்!

4. பொதுமன்னிப்பு

"படுகொலைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்ற போராளிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் மன்னிக்க வேண்டும்!" – இப்படிச் சொல்லி இருப்பவர் புலிகளின் பரம்பரை எதிரியான டக்ளஸ் தேவானந்தா. இன்று அமைச்சராக இருப்பவர். இப்படி சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"வவுனியா, முல்லைத் தீவுப் பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். அவர்களை விசாரணை செய்வோம்" என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்தார். இதன்படி 3,000 பெண்கள் உட்படப் பலரிடமும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை வேறு வேலைகள் பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்; சித்ரவதைகள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்கின்றன மனித உரிமை அமைப்புகள்!

5. ஏதாவது ஒரு நிவாரணம்

போர், மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல; அவர்களது அன்றாட வாழ்க்கை, இதுவரை சேர்த்துவைத்த சொத்துகள், பணம் அத்தனையையும் கொள்ளைகொண்டுவிட்டது. விவசாயம் பார்த்தவர்களுக்கு நிலம் இல்லை. மீன்பிடித் தொழில் செய்து பிழைத்தவருக்குப் படகும் வலையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் 560 மீன்பிடிக் கிராமங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, 2.70 லட்சம் மீனவர்கள் இருந்தார்கள்.

ஆனால், அது படிப்படியாகக் குறைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் ஆனார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களது மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிக் கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குத் கீழே தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன தென்னை, பனை மரங்கள் மொத்தமாகக் கொளுத்தப்பட்டன. தாங்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடாகவோ, அல்லது தங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளுக்கான கருணைத் தொகையாகவோஅந்தப் பணம் அமைய வேண்டும்!

6. பயமற்ற சூழ்நிலை

'இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை', 'பயங்கரவாதிகள் வேறு பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள்' என்று சொல்லி மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணு வத்தின் முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பள்ளிக்கூடங்கள், கோயில்கள், முக்கியத் தெருக்களில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். முன்பு மக்கள் இருந்த பெரிய வீடுகளில் இன்று ராணுவத்தினர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளில் ராணு வத்தினர் தங்கியுள்ளனர். வட கிழக்கில் 156 பள்ளிக்கூடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். முக்கிய மான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட் டம் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. செக் போஸ்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, மக்க ளுக்குப் பயமற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு முன் வர வேண்டும்!

7. யாழ்ப்பாணம்

ராணுவத்திடம் சுமார் 15 ஆண்டு களாக இருக்கும் யாழ்ப்பாணம், 'எமர்ஜென்ஸி' பகுதியாகவே இன்னமும் உள்ளது. மாலை 6 முதல் காலை 6 வரை யாரும் ரோட்டில் நடமாட முடியாது. எங்காவது வேலைக்குப் போகும் ஆட்களும் 6 மணிக்குள்ளாக வீட் டுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை ஆண்டு அடக்குமுறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. மேலும், அங்கு பொருளாதாரத் தடைகளும் விலக்கப்படவில்லை. பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் யாழ்ப் பாணத்தை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்!

8. கொழும்பு

எப்போதும் கொந்தளிப்பில் இருப்பவர்கள் கொழும்புத் தமிழர்கள். இங்கு தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் இல்லை. பதிலாக, சிங்களத் தீவிரவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உறுமய, ஜாதிகல உறுமய போன்ற குழுக்கள் எதையாவது சொல்லி தமிழர் கடைகள், வீடுகள், தொழிற்சாலைகளை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கிக்கொள்கிறார்கள். பூட்டி இருக்கும் வீடுகள் அடித்துத் திறக்கப்பட்டு நொறுக்கப்படுகின்றன. உயிருக்கும் உடைமைக் கும் கொழும்பில் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியமானது!

9. அச்சுறுத்தும் ஆயுதங்கள்

புலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆயுதம் தாங்கிய பல குழுவினர் இலங்கை முழுவதும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள். ஈ.என்.டி.எல்.எஃப்., டக்ளஸின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தன் தலைமையிலான பிளாட், கருணா குரூப் எனப் பலரும் ஆயுதம் தாங்கி அலைகி றார்கள். மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடுகள் நடப்பதும், திடீர்க் கொலைகள் நடப்பதற்கும் பின்னணியாக இவர்கள் இருப்பதாகவும் ஆட்கடத்தல், கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!

10.உண்மையை உணர்ந்த மனிதர்கள்

இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது இலங்கை. என்ன நடந்தது, எத்தனை பேர் செத்தார்கள், இருப் பவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன தேவை என எதையும் நேர டியாகப் பார்க்க யாரையும் அனும திக்காத நிலையைத் தளர்த்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் என அங்கீகரிக் கப்பட்ட ஆர்வலர்களை உள்ளே அனுப்பி, மக்களைச் சந்திக்கவைத் தால் மட்டுமே அங்கு உள்ளவர் களுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கும்.

"20 நாடுகளின் உதவியுடன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றோம்" என்று வெளி விவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சொல்லி இருக்கிறார். அப்படியானால், போருக்குப் பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் இந்த 20 நாடுகளுக்கும் உண்டுதானே! அதில் இந்தியாவும் ஒன்று.

நன்றி: விகடன்

StumbleUpon.com Read more...

இலங்கை ஆபத்தான நாடு-அமெரிக்கா

இலங்கைக்கான விஜயங்கள் ஆபத்தானதென அமெரிக்கா அந்நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது :

 
இலங்கைக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்வது ஆபத்தானதாக அமையக் கூடும் என அந்நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 
இலங்கையின் சில பகுதிகளுக்கு செல்வது ஆபத்தானதென அமெரிக்க சுட்டிக்காட்டியுள்ளது.
 
அனாவசியமான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான பயணங்களை கூடிய வரையில் தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்க அரசாங்கத்தினால் கடந்த 26ம் திகதி விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்க பிரஜைகள் தங்களது பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், தன்னார்வ தொண்டு ஊழியர்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதாக இலங்கை அரசாசங்கம் விடுத்துள்ள அறிவிப்புக்களில் அமெரிக்க அரசாங்கம் கொண்டுள்ள நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP