பெங்களூர் தமிழ்ச்சங்கம் அதிரடி முடிவு ,தமிழர்களை எதிர்த்தால் ஓட்டு போட மாட்டோம்! ,
>> Tuesday, April 8, 2008
பெங்களூர் தமிழ்ச்சங்கம் அதிரடி முடிவு
தமிழர்களை எதிர்த்தால் ஓட்டு போட மாட்டோம்!
கன்னட வெறி அரசியல் தலைவர்கள் பீதி
பெங்களூர், ஏப். 7-
தமிழை, தமிழரை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு கர்நாடக தமிழர்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று கர்நாடக தமிழ்ச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களை அடித்து நொறுக்கினர். தமிழ்ச்சங்க அலுவலகம், பத்திரிக்கை ஆபீஸ்கள், தமிழக அரசு பஸ்களை தாக்கினர். இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. திரைப்பட நடிகர், நடிகைகள் போராட்டத்தில் குதித்தனர். அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரையில் ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்திவைப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து, இரு மாநிலங்களிலும் பரபரப்பு அடங்கியுள்ளது.
இதற்கிடையில் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடாவும் தமிழ்ச்சங்க தலைவர் சண்முகசுந்தரமும் பேச்சுவார்த்தை நடத்தி பந்த்துக்கு ஆதரவு தருவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ் அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. பெங்களூரில் தமிழர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது மற்றும் தமிழர் பாதுகாப்பை வலியுறுத்துவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது. 50-க்கும் அதிகமானவர்கள் பேசினர். தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1991-ம் ஆண்டில் கர்நாடக முதல்வர் பங்காரப்பா குழுவினரால் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் பல்லாயிரக்கணக்கான கர்நாடக தமிழர் குடும்பங்களில் உயிர் இழப்புகளும், உடமை இழப்பும் மான சிதைவுகளும் உண்டாயின. இதற்கு எதிர் விளைவுகளை தமிழகத்தில் யாரும் செய்யவில்லை. ஆனால் கன்னட அமைப்புகள் அவர்களை திடீர் தலைவர்களாக காட்டிக்கொள்ள காவிரி நீர் பிரச்னை என்றும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்றும் எந்த பிரச்னையையாவது கைகளில் எடுத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை குலைப்பதும், தமிழர்கள் எதிர்ப்பை வலுப்படுத்தும் வழக்கமாக இருந்தன. இதை தேசிய கட்சிகளை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள், நடுநிலையாளர்களான அறிஞர்கள் யாருமே கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதும் இல்லை. காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கலவரம் செய்யும் கன்னட அமைப்பினருக்கு காவல் இருப்பதுபோல் நடந்துகொள்கின்றனர்.
பெங்களூர் தமிழ்ச்சங்கம் தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும், தமிழக அரசும் அதனைச்சார்ந்த தோழமைக்கட்சிகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அனைத்து கலைஞர்களும் ஒன்று திரண்டு கர்நாடக தமிழர்களின் பாதுகாப்புக்கு துணைபுரிந்தனர். கர்நாடக தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. சாலையில் இறங்கி போராடவும் முன்வந்த தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், நடிகர்கள் சங்கத்துக்கு பெங்களூர் தமிழ்ச்சங்கமும், கர்நாடகாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம். பத்திரிகை அலுவலகங்களை தாக்கிய வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் திரைப்படத்தை திரையிடும் திரையரங்க உரிமையாளர்கள், தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து அவர்களின் உரிமைகளையும் மற்றும் இந்திய அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் காப்பாற்றிக்கொள்ள அறிவுறுத்தவும் அதற்கான அனைத்து உதவிகளையும் பெங்களூர் தமிழ்ச்சங்கமும், அனைத்து தமிழ் அமைப்புகளும் வழங்கும் என்று உறுதியளிக்கின்றன. தமிழர்களுக்கு எதிரான எந்த அமைப்புகளுக்கும், சார்பு நிலை கட்சிக்கும் கர்நாடக தமிழர்கள் யாரும் வருகிற தேர்தலில் வாக்களிக்க கூடாது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகா வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட்டு வரும் தமிழ்ச்சங்கம் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கர்நாடக வெறியர்களாக செயல்படும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.