இஸ்ரேலிடம் 150 அணுகுண்டுகள் இருக்கின்றன அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தகவல்
>> Wednesday, May 28, 2008
லண்டன், மே.28-
இஸ்ரேலிடம் 150 அணுகுண்டுகள் இருக்கின்றன என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தார்.
இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் இருப்பதாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படையாக அறிவித்து இருப்பது இதுதான் முதல் முறை ஆகும்.
ஒப்புக்கொண்டது கிடையாது
அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலிடம் அணுஆயுதங்கள் இருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் அணுகுண்டு இருப்பதாக ஒப்புக்கொண்டது கிடையாது. அமெரிக்க அதிகாரிகளும் இதை வெளிப்படுத்தியது கிடையாது. முதல் முறையாக இப்போது தான் அது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரே தன் வாயால் அதை அறிவித்து இருக்கிறார்.
ஜிம்மி கார்ட்டர் 1977-ம் ஆண்டு முதல் 1981-ம்ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தார். அவரது பதவி காலத்தில் தான் இஸ்ரேல் எகிப்து இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட கார்ட்டர் உதவியாக இருந்தார்.
அவர் லண்டனில் ஒரு விழாவில் பேசும்போது, அமெரிக்காவிடம் 12ஆயிரம் அணுஆயுதங்கள் உள்ளன. ரஷியாவிடமும் அதே அளவு அணுஆயுதங்கள் உள்ளன. இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளிடம் பலநூறு அணுஆயுதங்கள் உள்ளன. இஸ்ரேலிடம் 150 அணுஆயுதங்கள் உள்ளன என்று தெரிவித்தார். எனவே ஈரான் நாட்டுடன் அமெரிக்கா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, அணுஆயுத திட்டத்தை கைவிடச்செய்யவேண்டும் என்று கார்ட்டர் வலியுறுத்தினார்.
கண்டனம்
இஸ்ரேலிடம் அணுஆயுதம் இருப்பதாக கார்ட்டர் தெரிவித்து இருப்பதற்கு இஸ்ரேல் அதிகாரி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது நல்லது செய்வதற்கு பதிலாக தீமை தான் செய்யும் என்று அவர் கூறினார்.
கார்ட்டர் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். அப்போது அவர் சிரியாவில் ஹமாஸ் தீவிரவாதக்குழு தலைவரை அவர் சந்தித்து பேசினார்.
கார்ட்டர் இஸ்ரேலின் பாலஸ்தீன கொள்கையை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் கார்ட்டர் இஸ்ரேல் சென்றபோது, அவரை இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மர்ட் சந்திக்க மறுத்துவிட்டார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=415389&disdate=5/28/2008
0 கருத்துரைகள்:
Post a Comment