சமீபத்திய பதிவுகள்

வங்காளதேச அதிபர் குடும்பத்தோடு சுட்டுக்கொலை!!!!!!!!!!!!

>> Tuesday, May 6, 2008

வங்காளதேச அதிபர் முஜிபுர் ரகிமான் குடும்பத்தோடு சுட்டுக்கொலை
 

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசத்தை விடுவித்து சுதந்திர நாடாக ஆக்கிய முஜிபுர் ரகிமான் குடும்பத்தோடு சுட்டுக் கொல்லப்பட்டார்.

வங்காளதேசம் உதயம்

கிழக்கு பாகிஸ்தானின் சுயாட்சிக்காக முஜிபுர் ரகிமான் பாடுபட்டார். இதனால் 1970_ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 
இந்திரா காந்தியுடன் ரகிமான்.
இதைத்தொடர்ந்து, வங்காளதேசத்தில் சுதந்திரப்போர் மூண்டது. பாகிஸ்தான் படைகளை எதிர்த்து ரகிமான் அமைத்த சுதந்திர படை போரிட்டது. சுதந்திர படைகளுக்கு ஆதரவாக இந்திய படைகளும், வங்காள தேசத்துக்குள் புகுந்தன.

இந்திய படைகளும், சுதந்திர படைகளும் இணைந்து வீரப் போர் புரிந்தன. அதை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம் 1971 டிசம்பர் 17_ந் தேதி சரணாகதி அடைந்தது.

இதற்கிடையே, ரகிமானை தூக்கில் போட்டு உடலை அடக்கம் செய்வதற்கு சிறைச் சாலைக்கு அருகிலேயே குழியும் வெட்டி வைத்திருந்தார், பாகிஸ்தான் அதிபர் யாகியாகான். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் படுதோல்வி அடைந்ததால், யாகியாகான் ஆட்சி கவிழ்ந்தது. பூட்டோ ஆட்சிக்கு வந்ததும் 7_1_1972_ல் ரகிமானை விடுதலை செய்தார்.

சுதந்திர வங்காளதேசத்தின் பிரதமராக ரகிமான் பதவி ஏற்றார்.

ராணுவ புரட்சி

முஜிபுர் ரகிமான் 1975_ம் ஆண்டு ஜனவரி 25_ந்தேதி எல்லா கட்சிகளையும் தடை செய்து விட்டு, "ஒரு கட்சி ஆட்சி"யை கொண்டு வந்தார். முழு அதிகாரங்களையும் கொண்ட அதிபர் (ஜனாதிபதி) பொறுப்பு ஏற்றார்.

15_8_1975 அன்று காலை 5_15 மணிக்கு வங்காள தேசத்தில், ரகிமானுக்கு எதிராக ராணுவ புரட்சி நடந்தது. இது வரை வர்த்தக மந்திரியாக இருந்த முஸ்தாக் அகமது (57) தலைமையில் இந்த ராணுவப்புரட்சி நடந்தது. வங்காளதேச தலைநகரான டாக்கா ரேடியோ நிலையம் வழக்கமான நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, இதை அறிவித்தது.

சுட்டுக்கொலை

"புரட்சியின்போது ரகிமான் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆட்சியை ராணுவம் கைப்பற்றிக்கொண்டது. முஸ்தாக் அகமது புதிய ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ளார். மக்கள் அனைவரும் புதிய ஆட்சிக்கு விசுவாசமாக கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும்" என்று ரேடியோவில் மேஜர் சலீம் என்ற ராணுவ தளபதி அறிவித்தார். (இவர், ராணுவத்தில் இருந்து ரகிமானால் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் ஆவார்.)

வங்காளதேசத்தில் ராணுவ புரட்சி நடந்ததையும், அதில் ரகிமான் இறந்து விட்டார் என்பதையும் டாக்கா ரேடியோ திரும்ப திரும்ப ஒலிபரப்பியது. 8 மணிக்கு பிறகு ரகிமான் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

பிரதமரும் கொலை

வங்காளதேசத்தின் பிரதமரான மன்சூர் அலியும் கொல்லப்பட்டார் என்று டாக்கா ரேடியோ பிறகு அறிவித்தது. ரகிமானின் 2 மருமகன்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ரகிமானின் நண்பர்

புரட்சியை தலைமை தாங்கி நடத்தியவரான முஸ்தாக் அகமது, ஒரு காலத்தில் ரகிமானின் வலது கைபோல் விளங்கியவர். வங்காளதேசத்தில் போர் நடந்தபோது ரகிமான் அமைத்த புரட்சி அரசாங்கத்தில் இவர் வெளிநாட்டு இலாகா மந்திரியாக பதவி வகித்தார். வங்காளதேசம் சுதந்திரம் அடைந்த பிறகு இவர் வர்த்தக மந்திரியாகவும், வெளிநாட்டு வர்த்தக மந்திரியாகவும் நியமிக்கப்பட்டார்.

புரட்சி நடந்தபோது ரகிமான் வீடு இருந்த பகுதியில் கடும் சண்டை நடந்தது. ரகிமான் ஆதரவு ராணுவத்தை புரட்சி ராணுவத்தினர் அடக்கி விட்டனர். அன்று பிற்பகலில் புதிய அதிபராக முஸ்தாக் அகமது பதவி ஏற்றார்.

புரட்சி ஏன்?

ராணுவ புரட்சி நடத்தியது ஏன் என்பதை விளக்கி, முஸ்தாக் அகமது ரேடியோவில் பேசினார். அவர் கூறியதாவது:_

வங்காளதேசத்தில் ஆட்சி நடத்தி வந்த முஜிபுர் ரகிமான் பதவியில் தொடர்ந்து நீடிக்க சதி செய்தார். இதனால் பொது மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவு பெற்ற ஒரு சிலரின் கையில் ஏராளமான செல்வம் சேர்ந்தது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான மக்களின் கனவுகள் நிறைவேற வில்லை. அதற்குப் பதிலாக ஆளும் கட்சியினர் பல்வேறு வகையான ஊழல்களில் ஈடுபட்டார்கள். நாட்டின் பொருளாதார நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. முக்கிய தொழிலான சணல் தொழில் நசிந்து போயிற்று. அரசாங்கத்துக்கு எதிராக யாரும் எதுவும் பேசமுடியாத நிலை ஏற்பட்டது. பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்டது.

நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். இதனால் ராணுவம் தனது கடமையை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசிய தேவை காரணமாகவே இந்த ராணுவப் புரட்சி நடத்த வேண்டி வந்தது."

இவ்வாறு முஸ்தாக் அகமது பேசினார்.

உடல் அடக்கம்

முஜிபுர் ரகிமானின் உடல், தலைநகர் டாக்காவில் இருந்து அவருடைய சொந்த கிராமமான துங்கிபாரா என்ற ஊருக்கு (பரீப்பூர் மாவட்டம்) எடுத்துச் செல்லப்பட்டது. அவருடைய குடும்பத்தினருக்கான தனி மயானத்தில் ரகிமான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

குடும்பமே கொலை

ரகிமான், அவரது 2 மருமகன்கள், பிரதமர் மன்சூர்அலி ஆகியோர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 2 நாட்கள் கழித்து ரகிமானின் மனைவி பாத்திமா, சமீபத்தில் திருமணமான 2 மகன்கள், அவர்களுடைய மனைவியர், ரகிமானின் மூன்றாவது மகன் ரசல் (வயது 9), ஆகியோரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ரகிமானின் மகள் ஹசீனா வெளிïரில் இருந்ததால் அவர் மட்டும் தப்பினார்.

(இவர் பின்னர் தேர்தல் மூலம் வங்காளதேச அதிபரானார்)
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP