சமீபத்திய பதிவுகள்

கல்விக் கடன் பெறுவது எப்படி?

>> Saturday, June 7, 2008


வருடங்களுக்கு முன்பு தொழிற்கல்வி கற்பது என்பது பெரும்பாலான ஏழை மாணவர்களுக்கு பகல் கனவாகவே இருந்து வந்தது. அனைத்து மாணவர்களுக்கும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில் பெரும்பாலானவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க வேண்டி உள்ளது. ஒரு மாணவர் என்ஜினீயரிங் படித்து முடிப்பதற்கே சில லட்சங்கள் தேவைப்படுகிறது. ஏழை மாணவர்கள் சில லட்சங்களை தயார் செய்வது என்பது சிரமமான விஷயம். இப்போது கல்விக் கடன் கிடைப்பதால், அனைவரும் கல்வி கற்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே கல்விக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள், வழிமுறைகள் போன்றவற்றை பார்ப்போம்.

கல்விக் கடன் என்றால் என்ன?

வாகனக் கடன், வீட்டுக் கடன் போன்று கல்வி கடனும் ஒருவகையான கடன் ஆகும். இந்தக்கடனை பெறும் மாணவர் படிப்பதற்காக ஆகும் செலவுகளை வங்கிகள், கடனாக அளிக்கும். படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால், அதற்கு ஆறுமாதத்திற்கு பிறகு அல்லது படித்து முடித்த ஒரு வருடத்திற்கு (வேலை கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும்) பிறகு, வாங்கிய கடனை தவணை முறையில் திருப்பி செலுத்த வேண்டும். மற்ற கடன்களைப் போல் அல்லாமல் கல்விக் கடனுக்கு சில சலுகைகளும் கிடைக்கும். 30 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கடனை பெறலாம். படித்து முடித்தபிறகு இ.எம்.ஐ மூலம் 1-8 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்தலாம்.

கல்விக் கட்டணம், விடுதி கட்டணம், புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், தேர்வு கட்டணம் போன்ற செலவுகளுக்கு கடன் அளிக்கப்படுகிறது. சில வங்கிகள் கல்லூரிக்கு செல்ல உதவும் இரண்டு சக்கர வாகனம் வாங்கக்கூட கடன் அளிக்கின்றன. வெளிநாடு சென்று படிப்பவராக இருந்தால், விமானக் கட்டணமும் கல்விக்கடன் மூலம் அளிக்கப்படும்.

எந்த படிப்புகளுக்கு கடன் கிடைக்கும்?

வேலை வாய்ப்புள்ள அனைத்து வகையான படிப்புகளுக்கும் கல்விக்கடன் கிடைக்கும். ஒவ்வொரு வங்கிக்கும் தகுந்தபடி இந்த படிப்புகள் மாறுபடும். மேலாண்மைக் கல்வி, என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகள், தொழில்நுட்ப படிப்புகள் போன்ற படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் எளிதாக கல்விக்கடன் கிடைக்கும்.

இளநிலைப் படிப்புகளுக்கும் உயர்நிலைப் படிப்புகளுக்கும் கடன் வழங்கப்படும். சில வங்கிகள் பள்ளியில் படிப்பதற்கு கூட கடன் வழங்குகின்றன. சில வங்கிகள் சான்றிதழ் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் போன்றவற்றிற்கும் கடன் வழங்குகின்றன.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

இந்தியாவில் கல்வி கற்பதற்கு 7.5 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். வெளிநாட்டில் கல்வி கற்க 20 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது. இந்தியாவில் படிக்க 4 லட்ச ரூபாய் வரை கியாரண்டி இல்லாமல் கடன் பெறலாம். அதற்கு மேற்பட்ட தொகைக்கு மூன்றாம் நபர் கியாரண்டி தேவைப்படும். சில சமயம் சொத்துகளை கொலேட்டரல் செக்ïரிட்டியாக அளிக்க வேண்டி இருக்கும். தேசிய சேமிப்பு பத்திரங்கள், எல்.ஐ.சி பாலிசி போன்றவற்றையும் செக்ïரிட்டியாக அளிக்கலாம். நான்கு லட்சம் ரூபாய் வரையான கடன்கள், கடன் பெறும் மாணவரின் பெற்றோரை ஜாமீன்தாரராக கொண்டு வழங்கப்படும்.

 
 
4 லட்சத்திற்கு மேற்பட்ட கடன் எனில், படிப்பதற்கான மொத்த செலவில், 85 சதவீதம் வரை கடனாக அளிப்பார்கள். மீதமுள்ள 15 சதவீத தொகையை நமது கையிருப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்.

எப்படி கடன் பெறுவது?


கல்விக் கடன் பெறுவதற்கு கல்லூரியில் சேர்ந்ததற்கான சேர்க்கை சான்றை அளிக்க வேண்டும். மாணவர் கடைசியாக எழுதிய தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றையும் அளிக்க வேண்டும். படிப்பு முடியும் வரை ஆகும் தோராயமான செலவுகளை, சம்பந்தப்பட்ட கல்லூரியில் இருந்து வாங்கி அளிக்க வேண்டும். கூடுதலாக பெற்றோரின் வருமானத்தை தெரிவிக்கும் சான்றுகளையும் அளிக்கலாம். பெற்றோர் வருமான வரித்தாக்கல் செய்திருந்தால், அந்த சான்றையும் அளிக்க வேண்டும். அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றையும் அளிக்க வேண்டும். இதுதவிர கூடுதல் சான்றுகளையும் சில வங்கிகளில் கேட்பார்கள்.

வங்கியில் கேட்கப்படும் சான்றுகளை இணைத்து, விண்ணப்பம் அளித்தால் கல்விக்கடன் வழங்கப்படும். வருடா வருடமோ, ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கல்விக்கான செலவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் மற்றக் கடன்களைப் போல முழுத் தொகையையும் ஆரம்பத்திலேயே அளிக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
வட்டி விகிதம் :

இது ஒவ்வொரு வங்கிக்கும் தகுந்தபடி மாறுபடும். பொதுவாக 12-15 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. வீட்டுக் கடனைப் போன்று, இதிலும் நிலையான வட்டி விகிதம், மாறுபடும் வட்டி விகிதம் ஆகியவை உண்டு. மாதாமாதம், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை என ஒவ்வொரு வங்கிக்கு தகுந்தபடி, இ.எம்.ஐ தொகையை கழித்து வட்டி கணக்கிடப்படும். படிப்பு முடியும் வரை கடனுக்கான வட்டி தனி வட்டியாகவே கணக்கிடப்படும். படிப்பு முடிந்தவுடன் அது கூட்டு வட்டியாக கணக்கிடப்படும். 0.25-2 சதவீதம் வரை செய்முறைக் கட்டணம் வசூலிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே கடனை முழுமையாக திருப்பி செலுத்தினால், மீதமுள்ள தொகையில் 2 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.

***

கவனிக்க வேண்டியவை

கல்விக் கடனை, மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கு அருகில் இருக்கும் வங்கியில் வாங்குவதா? அல்லது மாணவரின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள வங்கியில் வாங்குவதா? என்ற சந்தேகம் பெரும்பாலான பெற்றோர்களுக்கு உண்டு. படிக்கும் கல்வி நிறுவனத்திற்கு அருகில் உள்ள வங்கியில் கடன் வாங்குவதே சிறந்தது. ஏனென்றால் சம்பந்தப்பட்ட மாணவர் தேவைப்படும்போது, கல்விக் கட்டணங்களை அருகில் இருக்கும் வங்கியில் இருந்து எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

 
 
பெற்றோர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில், தங்களது குழந்தைக்காக கல்விக்கடனை பெற

முயற்சி செய்வது நல்லது. வாடிக்கையாளராக அறியப்பட்ட வங்கியில் கடன் பெறுவதில் சிரமம் இருக்காது. புதிதாக அறிமுகமில்லாத வங்கியில் கடன் கேட்கும்போது, கடன் மறுக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

கல்விக் கடனுக்கு கியாரண்டி கேட்டு, கடன் மறுக்கப்படுவதாக பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து இந்த வருடம் புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி கல்விக் கடனாக அளிக்கப்படும் தொகைக்கு அரசு கியாரண்டி அளிக்கும். இதனால் அனைவருக்கும் கடன் எளிதாக கிடைக்கும்.

கல்விக்கடன் பெற வங்கிகளில் ஏறி இறங்குவதை தடுக்கவும், புதிய வசதி வந்துவிட்டது. அதன்படி ஆன்லைன் மூலமே கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். சம்பந்தப்பட்ட வங்கி ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை பரிசீலித்து கடன் கிடைக்குமா? இல்லையா? என்ற தகவலை அளிக்கும். கடன் அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டால், தேவைப்படும் ஆவணங்களை நேரடியாக அளித்துக் கடனை பெறலாம். இதன்மூலம் இரண்டு நாட்களுக்குள் கடனை பெறலாம். பிரபல வங்கிகள் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.எம் போன்ற பிரபலமான கல்வி நிறுவனங்கள் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தங்கள் மாணவர்களுக்கு எளிதாக கடனை அளிக்கின்றன.
 

 
http://www.dailythanthi.com/muthucharam/Home/second_page.asp?secid=23&artid=3261&issuedate=6/7/2008

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP