சமீபத்திய பதிவுகள்

இந்தியா கொதித்தெழ வேண்டாமா?(கச்சத்தீவு பிரச்சனை என்ன ?)

>> Thursday, July 17, 2008

 
20.07.08      மற்றவை
 

காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத் துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களின் எலும்பைப் பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப் பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

1983 ஆகஸ்ட் 13-ம்தேதி தொடங்கிய இந்த அனர்த்தம், இன்று வரை நீடிக்கிறது. இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவரை பலியான தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டும். ஊனமானவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டும். கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல்.

இந்த இழிநிலை தீர கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் பதாகை தூக்கி வரும் சூழலில், `கச்சத்தீவு கைவிட்டுப் போனதேன்?' என்று தொடர்ந்து எழுதி, பேசி வரும் அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவரான புலவர் புலமைப்பித்தனை நாம் சந்தித்தோம்.

`கச்சத்தீவு பூர்வீகமாகவும், பூகோளரீதியாகவும் எங்களுக்குத்தான் சொந்தம்' என்று  இலங்கை பேசி வருகிறதே?

``அப்படி ஒரு பிரசாரம்  இப்போது அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருக்கிறது. 1822-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி, கச்சத்தீவை குத்தகைக்குக் கேட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது ராமநாதபுரம் சமஸ்தானத்தோடுதான். இலங்கையோடு அல்ல. பேரரசி விக்டோரியா மகாராணி காலத்தில் இலங்கையின் அமைச்சகச் செயலாளராக இருந்த பி.வி.பியர்ஸ் என்பவர் அவர் தயாரித்த  வரைபடத்தில், `கச்சத்தீவு  ராமநாதபுரம் ராஜாவுக்குச் சொந்தமானது. இலங்கைக்குச் சொந்தமானது அல்ல' என்று விரிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

1968-ல் கச்சத்தீவில் சிங்கள ராணுவம் முகாமிட்டுப் போர்ப்பயிற்சி நடத்தியபோது, அதைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, கச்சத்தீவு இந்தியாவின் பூர்வீகச் சொத்து. தனுஷ்கோடி எப்படி கடற்கோளால் மூழ்கியதோ, அதுபோல ஒரு கடற்கோளால் கச்சத்தீவு நம் மண்ணில் இருந்து பிரிந்திருக்கிறது என்பதுதான் உண்மை.''

என்ன காரணத்துக்காகக் கச்சத்தீவு இலங்கைக்கு தானம் கொடுக்கப்பட்டது?

``காலத்தின் கட்டாயம் அது. இந்தியாவின் பூகோள அமைப்பு இயற்கையாகவே தமிழனுக்கு எதிரியாக அமைந்து விட்டது. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்கதேசம் உருவானது. அதை விரும்பாத `உலக போலீஸ்' அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத்த எண்டர்பிரைஸ் என்ற அணுஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது. கொல்கத்தாவைத் தாக்குவது அவர்களது திட்டம். அப்படித் தாக்கியிருந்தால் இன்னொரு நாகசாகியாக கொல்கத்தா மாறியிருக்கும். அந்தச் சமயத்தில் அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருந்த சோவியத் ரஷ்யா, நமக்கு ஆதரவாகக் களமிறங்கியதால் அமெரிக்கா பின்வாங்கியது.

அதன்பின் ஐ.நா.வில் உலகநாடுகள், `இந்துமாக் கடலில் நின்றுகொண்டோ அல்லது பறந்து கொண்டோ எந்த நாடும் கடலோரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாது' என தீர்மானம் நிறைவேற்றின. இந்தநிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியாவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே பாகிஸ்தானும், சீனாவும். கிழக்கும், மேற்கும் கடல்பகுதிகள். ஆபத்தில்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதி இலங்கைதான். வங்கதேசப் போருக்குப் பின் இலங்கையில் விமானதளம் அமைக்க இடம் கேட்டுக் கொண்டிருந்தது பாகிஸ்தான். அதைத் தடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகாவிடம் பேசி தாஜா செய்ய முயன்றார். `கச்சத்தீவை எங்களுக்குத் தந்து விட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம்' என்று பண்டாரநாயகா கேட்டபோது, இந்திராவால் மறுக்க முடியவில்லை.

எனவே, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழனின் நிலத்தை, உணர்வை பலி கொடுத்தாலும் பரவாயில்லை என்று நம்மை பலிகடாவாக்கி, கச்சத்தீவு 1974-ல் இலங்கைக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 76-ல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். `தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வெடுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம்' என்பது அந்த ஒப்பந்தத்தின் சாரம். ஆனால் ஏற்கெனவே இருந்த  உரிமைகளும், சலுகைகளும் சுத்தமாகப் பறிபோயின என்பதே நிஜம்!''

இயற்கையின் சாபம், பூகோள அமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

``வேறு வழி? ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 1983-ல் இலங்கையில் இனக்கலவரம் வெடித்தபோது, கொழும்பு  நகரில் ஆஸ்திரேலிய நாட்டவர்கள் மூன்றுபேர் காணாமல் போனதாகப் பேச்சு. ஆஸ்திரேலிய அரசு கடுமையாக அச்சுறுத்தியதால், அடுத்த ஒரு மணிநேரத்தில் அவர்கள்மூவரையும் கண்டுபிடித்து உச்சகட்ட பாதுகாப்போடு தனிவிமானத்தில் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தது இலங்கை அரசு.

இங்கே கடந்த வாரம் கூட அறுநூறு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 1500 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கடத்திச் சென்று அரைநிர்வாணப்படுத்தி, ஏதோ கிரிமினல்களை விசாரிப்பதைப்போல சித்திரவதை செய்து அனுப்பி வைத்திருக்கிறது. அது இந்தியாவுக்கு அவமானமாகப் படவில்லையா? இந்தியா கொதித்தெழ வேண்டாமா? ஏன் அடக்கியே வாசிக்கிறார்கள்?

சுண்டைக்காய் நாடான இலங்கையைப் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்துவிடும். எனவே தமிழினம் எப்படிப் போனால் என்ன? `தேசத்தைக் காக்க வேண்டும்' என்ற முடிவில் நிலையாய் இருக்கிறது மைய அரசு.

1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தபோது, பாகிஸ்தானுக்கு கட்டுநாயகா விமானதளத்தைத் தர  சிறீமாவோ பண்டாரநாயகா சம்மதித்தார். பதறித் துடித்த லால் பகதூர் சாஸ்திரி, இலங்கையுடன் பேசினார். `பாகிஸ்தானுக்கு விமானதளத்தைத் தராமல் இருப்பதற்கு ஈடாக ஐந்து லட்சம் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு கப்பலேற்றச் சம்மதா?' என இலங்கை கேட்டது. சாஸ்திரி தலையசைத்தார். விளைவு? ஐந்து லட்சம் தமிழர்கள் இங்கே அகதிகளாக வந்து சேர்ந்தார்கள்.

அது மட்டுமா? `திரிகோணமலையில் அமெரிக்கா படைத்தளம் அமைக்க அனுமதி கேட்டபோது, அப்படி நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் 1987-ல் இந்திய அமைதிப்படையை ராஜீவ்காந்தி இலங்கைக்கு அனுப்பினார்' என அந்தப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற இந்திய ராணுவத் தளபதி ஒருவரே அவரது புத்தகத்தில் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆக, இந்தியாவின் பாதுகாப்புக்காக தெற்கிலுள்ள தமிழினத்தின் உடைமைகள் பறிபோனாலும் பரவாயில்லை என்று இந்திய அரசு கருதுகிறது. நாதியற்றதா தமிழ்ச்சமூகம்?''

இதற்குத் தீர்வுதான் என்ன? காலம் முழுக்க இலங்கைக்கு இந்தியா தலையாட்டிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?

``ஆம். தலையாட்டத்தான் வேண்டும். அண்மையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தபோது, அந்த நாட்டுக்கு நூறு கோடி டாலரைக் கொடுத்திருக்கிறது இந்தியா. அதாவது, நாலாயிரத்து இருநூறு கோடி ரூபாய். அந்தப்பணத்தில் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை ஆயுதம் வாங்கப் போகிறது. அதாவது இந்தியா தந்த பணத்தில் பாகிஸ்தானிடம் ஆயுதம்! தமிழக பி.ஜே.பி. தலைவர் இல.கணேசன் கூட இதைக் கண்டித்திருக்கிறார். புலிகள் மீது குண்டுவீசப் போவதாகக் கூறி பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதம் வாங்கி தமிழர்களை அழிக்கப் போகிறார்கள். இதுபோன்ற பேரவலங்கள்  தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதைத் தடுக்க ஒரேவழி கச்சத் தீவை மீட்பதுதான்.''

படம் : ம. செந்தில்நாதன்
ஸீ பா. ஏகலைவன்

http://www.kumudam.com

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP