அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா நாடு முழுவதும் விழாக்கோலம் (படம் இணைப்பு)
>> Tuesday, January 20, 2009
வாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை. கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார். ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர்.இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர்.கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா.பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார். துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா. சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார்.ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது.தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார். இனப்பாகுபாடு ஒழிவதற்காகவும், கருப்பர், வெள்ளையர் சமத்துவத்துக்காகவும் கடுமையாக போராடி மறைந்த, மனித உரிமை தலைவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் கல்லறையில் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்திய ஒபாமா, "மக்களுக்கு இந்த நாடு நிறைய செய்யவேண்டியுள்ளது' என்று குறிப்பிட்டார்.தன்னை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு நேற்று முன்தினம் விருந்து அளித்து கவுரவித்தார் ஒபாமா. இதில், வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காலின் பாவெல், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடென் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, அதிபர் தேர்தல் விவாதங்களின் போது நடந்த, சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள மெக்கெய்ன் தயங்கவில்லை. கலகலப்பாக விருந்து நடந்து முடிந்தது. கைதிகளுக்கு தண்டனை குறைப்பு : புஷ் கடைசி நாள் கையெழுத்து: அதிபராக ஒபாமா பதவியேற்றதும், புஷ்ஷின் எட்டு ஆண்டு அதிபர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. உடன் புஷ், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் சிலர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஆண்டிரீஸ் விமானப்படை தளத்துக்கு சென்றனர். அங்கு விமானப்படை விமானம் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தது.அதில், தன் சொந்த ஊரான டெக்சாசுக்கு புறப்பட்டுச் சென்றார். டெக்சாஸ், மிட்லாந்தில் தரையிறங்கிய புஷ், அங்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்ட பின், கிராபோர்டு பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு சென்றடைந்தார்.புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தின் கடைசியில், நாட்டின் பல தலைவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், தென்கொரியா, இஸ்ரேல், பிரேசில், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.பதவிக்காலம் முடிவுக்கு வரும் கடைசி நாளான்று, 189 கைதிகளுக்கு மன்னிப்பும், ஒன்பது பேருக்கு தண்டனைக் கால குறைப்பும் வழங்கினார். இதற்கு முன், கிளின்டன் பதவி விலகும் போது, 396 பேருக்கு மன்னிப்பும், 61 பேருக்கு தண்டனைக் குறைப்பும் வழங்கினார். அதிபர் ரீகன் பதவி விலகும் போது, 393 பேருக்கு மன்னிப்பும், 13 கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பும் வழங்கியிருந்தார். | |
|
0 கருத்துரைகள்:
Post a Comment