சமீபத்திய பதிவுகள்

விதியின் சதியா? மதியின் பிழையா?

>> Thursday, January 29, 2009

 
விதியின் சதியா? மதியின் பிழையா?
இலங்கைப் போர் தானாகவே ஓயும் வரை பிரச்னையைக் காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான்

முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

தங்கள் நாட்டின் ஒரு பகுதியைத் தாங்களே மீட்டெடுத்து வெற்றிக்கொடி ஏற்றியுள்ள இன்றைய சூழலில், இலங்கை ராணுவம் தன் பீரங்கிகளுக்கு ஓய்வு கொடுப்பது இயல்பானது. இதைப் போர் நிறுத்தம் என்று சொல்ல முடியாது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பகுதிகளை இழந்தாலும்கூட அவர்கள் மீண்டும் கொரில்லா போரை நடத்தவே செய்வார்கள்.

ஆகையால் விடுதலைப் புலிகளைப் பொருத்தவரையில் இந்தப் போர் தொடரும். தமிழீழம் கேட்டு எப்போதும்போல அவர்கள் தாக்குதலை நடத்துவார்கள்.

ஆனால், அது இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்குமே தவிர, இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக மீண்டும் மாறுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
கடந்த கால் நூற்றாண்டில் இலங்கைத் தமிழர்கள் போராடிப் போராடி ஓய்ந்து விட்டார்கள். மீண்டும் இலங்கை ராணுவத்தை எதிர்கொள்ளவும், விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆள் மற்றும் ஆயுதம் அளிக்கவும் அவர்களால் முடியுமா என்பதும் திட்டவட்டமாகத் தெரியவில்லை

இத்தனை காலமாக விடுதலைப் புலிகளின் பகுதிகளை நெருங்க முடியாத இலங்கை ராணுவம், மிகக் குறுகிய காலத்தில் அதைச் செய்து முடித்ததற்கு முக்கியமான நான்கு காரணங்கள் உண்டு.

இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கையில் குடியேறிய தமிழர்களுக்கும் இடையே இருந்த விரிசலை மிகவும் பெரிதாக்கி, தனக்கு ஆதரவைத் தேடிக்கொண்டது இலங்கை அரசு. இரண்டாவதாக, கிழக்கு மாகாணத்தில் அரசியல் தீர்வுக்கு கர்னல் கருணாவை இணங்கும்படி செய்ததும் இலங்கை அரசுக்குப் பலமாக அமைந்துவிட்டது.

உலக அளவிலான தீவிரவாதத்துக்கு எதிரான ஆதரவை விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது என்பது மூன்றாவது காரணம். நான்காவது முக்கியமான காரணம் இந்திய அரசு, இலங்கை அரசுக்குத் தந்த மறைமுக ஒத்துழைப்பு
இருபத்தைந்து ஆண்டுகளாக நுழைய முடியாத வன்னி காடுகளுக்குள் இலங்கை ராணுவத்தால் நுழைய முடிகிறது என்றால் அது, பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக, விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கர்னல் கருணா தந்த தகவல்களின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஒரு கருணா' என்பதுதான் இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளின் கோஷமாக இருக்கிறது.
நாளைய தமிழர் வரலாற்றில், இலங்கைப் பிரச்னையில் ஏற்பட்ட பின்னடைவு பற்றிக் குறிப்பிடும் போது, நிச்சயமாக இந்த வரிகள் இடம்பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை: "கருணா காட்டிக் கொடுத்தார்; கருணாநிதி கண்டும்காணாமல் இருந்தார்'.

ஏனென்றால், தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும், மத்திய கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்தும்கூட இலங்கை ராணுவத்தின் தாக்குதலை நிறுத்த முடியாமலும்,

இந்திய ராணுவத்தின் உதவிகளைத் தடைசெய்ய முடியாமல் விஷயத்தை தள்ளிப்போட்டதற்காகவும், தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த ஆதரவுக்குரல் கொடுத்தபோதும் அதை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியதற்காகவும் "உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்' என்று திமுகவினரால் அழைக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியையும் வரலாறு குற்றம் சுமத்தும்.

மத்திய அரசின் அரசியல் ஆய்வுக் குழுவில் ப. சிதம்பரம், டி.ஆர்.பாலு என்ற இரு தமிழர்கள் இடம்பெற்று இருப்பதால்,

மத்திய அரசு ஏன் தாமதித்தது அல்லது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்பதாக முதல்வர் கருணாநிதி சொல்லவே முடியாது.
முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் பிரதமரும் நானும் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தோம் என்று மக்களின் பரிதாபத்தைப் பெறவும் இயலாது.
தமிழ்ச் சாதி பற்றி மகாகவி பாரதியார் எழுப்பிய அதே கேள்விதான் இன்று நமக்கும் எழுகிறது:
"……………. கலியின் வலியை
வெல்லல் ஆகாதென விளம்புகின்றனரால்.
நாசம் கூறும் "நாட்டு வைத்தியர்'
இவராம். இங்கு இவ் இருதலைக் கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர்?
விதியே! விதியே! தமிழ்ச் சாதியை
என்செயக் கருதி இருக்கின்றாயடா
 
29 Jan 2009 USA

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1233247314&archive=&start_from=&ucat=& 


  16  user online 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP