சமீபத்திய பதிவுகள்

வரவிருக்கும் நவம்பர்27 … தரவிருக்கும் தகவல்… எதிர்பார்ப்புக்கள் என்னாகும் …???

>> Wednesday, November 4, 2009


 

thalavar varuvara-ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னத நாள்;

நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள். அந்நாளில்,ஒட்டுமொத்த உலகமுமே தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் என்ன சொல்லப் போகின்றார் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்.

ஆனால் இந்த வருடம், தேசியத்தலைவரின் உரையில் என்ன விடயம் இருக்கும் என்பதைவிட தேசியத்தலைவர் அதி மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உரை நிகழ்த்துவாரா???.. இல்லையா??? என்ற கேள்வியுடன்கூடிய எதிர்பார்ப்பே எல்லோர் மத்தியிலும் காணப்படுகின்றது. ஏனெனில், கடந்த மே மாதம் 17ஆம் திகதி முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவங்களின் பிற்பாடு, தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய ஐயப்பாடுகளுக்கும் கேள்விகளுக்கும் இன்றுவரைக்கும் தீர்க்கமான,தெளிவான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அன்றைய சம்பவத்தின்போது அங்கு இருந்தவர்களால்கூட எதையுமே உறுதியாகக் கூற முடியாதளவுக்கு இப்பொழுதும் அவ்விடயம் மர்மமாகவே தொடர்கின்றது.

இந்த நிலையிலேயே,

இம்முறை தலைவர் அவர்களால் வருடந்தோறும் நிகழ்த்தப்படும் மாவீரர்தின உரை நிகழ்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. தமது மான்புமிகு தலைவரின் மீள்வரவுக்காக… அவர் "மீண்டும் வருவார்" என்ற நம்பிக்கையுடன் முழுத் தமிழினமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள் எதிர்பார்க்கப்படுபவையேயன்றி உறுதியாகக் கூற முடியாதவை. அந்தவகையில், எதிர்வரும் மாவீரர் தினத்தன்று தலைவர் அவர்களின் உரை நிகழ்த்தப்படுமா என்பதும் உறுதியாகக் கூறமுடியாத ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. இந்த விடயம் இப்படியே இருக்க, தலைவரின் உரை நிகழ்த்தப்பட்டால் அல்லது நிகழ்த்தப்படாவிட்டால் என்ற இரு நிலைமைகளைப் பற்றியும் அதனாலான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றியும் அவசியம் ஆராயவேண்டியுள்ளது. தேசியத் தலைவர் தோன்றி தனது உரையை நிகழ்த்துவாரானால், தமிழர்களுக்கு அதைப்போன்றதொரு மிக மகிழ்ச்சியான விடயம் வேறெதுவுமே இருக்கமுடியாது. இவ்வளவு நாட்களாய் மனமுடைந்துபோய் சோர்ந்துபோய் இருந்தவர்கள் அனைவரையும் அதன்பின் மீள எழுச்சிகொள்ளவைப்பதாக அது அமையும்.

ஒட்டுமொத்த தமிழர்களும் புத்துணர்ச்சியோடு தலைவன்பின் அணிவகுத்து நிற்கத் தயாராவார்கள். தலைவன் வழிநின்று அடுத்தகட்ட விடுதலைப் போராட்டங்களை மிக எழுச்சியோடு தொடர முனைவார்கள். சிங்கள தேசத்திற்கு அது கலக்கத்தினைத் தோற்றுவிக்கலாம். சர்வதேசத்திற்கு ஆச்சரியத்தினை உருவாக்கலாம். ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டும் ஒரு முன்னேற்றகரமான பரிமாண மாற்றத்தினைப் பெறலாம். இவையெல்லாம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மீண்டும் தோன்றினால் சாத்தியப்படக்கூடிய விடயங்களாக அமையக்கூடியவை. ஆனால் எதிர்மாறாக, வரவிருக்கும் மாவீரர் தினத்தன்று தேசியத்தலைவர் தோன்றவில்லையாயின், தற்பொழுதும் மனந்தளராமல் இருக்கும் பலரும் மனமுடைந்து சோர்வடைந்து போகக்கூடிய பாதகமான சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன.

கடந்த மே 17 தொடங்கி இன்றுவரை தொடரும் மர்மமான கேள்விகளுக்கு தாமாகவே பதில்களை கண்டுகொள்ள எத்தனிப்பார்கள். தலைவர் வருவார் என நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அந்த ஏமாற்றம் பெரும் மனமுடைவினைக் கொடுக்கலாம். இதன் காரணமாக இனிவரும் காலங்களில் புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் மக்கள் போராட்டங்களில் ஒரு தொய்வுநிலைகூடத் தோன்றலாம். பல தரப்பினராலும், புலிகளின் தலைவர் இல்லை என்ற முடிவுகள் எடுக்கப்படலாம். இது இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பெரும் தாக்கத்தினை உண்டுபண்ணக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன .இவ்வாறாக, பல பாதகமான விளைவுகள் தலைவர் அவர்கள் தோன்றாதவிடத்தில் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன.

மொத்தத்தில், வரவிருக்கும் மாவீரர் தினத்தில் தேசியத்தலைவர் தோன்றி உரை நிகழ்த்த வேண்டும் என்பதே நம் எல்லோருடையதும் அங்கலாய்ப்பாய் இருப்பதனை உணரமுடிகின்றது. மேலோட்டமாகப் பார்க்கும் போதும் அதனாலான விளைவுகளை மேலோட்டமாக நோக்கும்போதும் தேசியத் தலைவர் தோன்றினால் மேலே குறிப்பிட்டதைப் போன்று அனைத்து விதத்திலும் நன்மைகளே என்று தோன்றலாம்.

ஆனால் நாம் ஒன்றை மட்டும்

தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, இன்றைய நிலைமையில் தலைவர் அவர்கள் தோன்றுவதற்கான புறச்சூழ்நிலைகள் உருவாகவில்லை என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளை அறிந்திருந்தும்,அவர்களின் போராட்டம் நியாயமானது என்பதனை உணர்ந்திருந்தும் சர்வதேசம் தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டம் சிதைக்கப்படுவதற்கு சிங்களத்திற்கு தனது முழுமையான ஆதரவினைக் கொடுத்திருந்தது. ஏனெனில், தமிழர்களுக்காக போராடிய புலிகளை சர்வதேசம் அச்சத்துடனேயே நோக்கியது. அவர்களின் அபரிதமான வளர்ச்சியும், செயற்திறனும், கட்டமைப்புக்களும் அவர்களை அச்சங்கொள்ள வைத்தன. அத்தோடு நாடுகளுக்கிடையிலான பிராந்திய வல்லாதிக்கம் மற்றும் வர்த்தகப் போட்டிகளும் சேர்ந்துகொண்டன. இவற்றின் காரணமாகவே, புலிகளுக்கு பயங்கரவாத முத்திரையைக் குத்தி, தடைகளை விதித்து அவர்களை அழிப்பதற்குரிய வழிமுறைகளை தேடிக்கொண்டிருந்தது.

வன்னி மீதான போரினை சாதகமாக பயன்படுத்தி தமது நீண்ட நாள் கனவினை நிறைவேற்றிக் கொண்டது சர்வதேசம். தமிழருக்கான தீர்வு என்பதனை விட புலிகளை அழிக்கவேண்டும் என்பதிலேயே சர்வதேசம் அதிக கரிசனை கொண்டிருந்தது என்பதனை கடந்த வரலாறு நமக்கு மிகநன்றாகவே புரியவைத்திருக்கின்றது. வன்னிப் போரின் பிற்பாடு புலிகளின் செயற்பாடுகள் அற்றுவிட்டதான நிலையில், சர்வதேசம் தற்போது தமது கவனத்தினை "தமிழர்களின் தீர்வு" என்பதன்மீது அக்கறைகொள்வதாக காட்டிக்கொள்கின்றது. அவை எந்தளவுக்கு உண்மைத் தன்மையோடு இருக்கும் என்ற சந்தேகம் இருந்தாலும், இவ்வாறான சர்வதேச மாறுதல்கள் தற்போதைய நிலைமையில் அவசியமானவையாகவே கருதப்படுகின்றன. இவற்றின் விளைவாக தற்பொழுது சிங்கள அரசு பெரும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருவதனையும் சர்வதேசத்தின் நெருக்குதல்களுக்கு முகம்கொடுத்து வருவதனையும் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இந்தியாவின் மெளனம் மற்றும் சீனா, ரஷ்யாவின் சிறீலங்கா ஆதரவுக் கொள்கை என்பன பாதகமானதாக இருந்தாலும் செல்வாக்குமிக்க மேற்குலக நாடுகளின் மாற்றங்கள் ஈழத் தமிழர்களிற்கு சாதகமானதாகவே அமைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் தொடந்தால் அவை எதிர்காலத்தில் மிகச்சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். ஆயினும், சர்வதேசம் புலியெதிர்ப்புக் கொள்கையிலிருந்து இன்னும் விடுபடவில்லையென்பது, புலிகள் மீதான தடைகளை அவர்கள் அகற்றாமல் இருப்பதிலிருந்தும்; ஆயுதப் போராட்டம் மீண்டும் தொடங்கலாம் என்ற அச்சம் சர்வதேச முக்கியஸ்தர்களினால் வெளியிடப்பட்டதிலிருந்தும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்பதனை சர்வதேசம் இன்னும் ஏற்கத் தயாராகவில்லை.

தமிழர்களின் பிரச்சினையினையும் அவர்களுக்காக புலிகள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தினையும் சர்வதேசம் வேறுபடுத்தியே பார்க்கின்றது. தலைவரின் மீள்வரவென்பது புலிகளின் மீள்தோற்றமேயாகும். இந்நிலையில் தலைவர் அவர்கள் வெளிப்பட்டால் சர்வதேசம் தற்போது கொண்டிருக்கும் தமிழர் சார்பான ஆதரவுக் கொள்கையை கைவிட்டு மீண்டும் புலிவேட்டைக்கு புறப்பட்டுவிடும். இதனால் புலிகளின் மீள்தோற்றம் முளையிலேயே கிள்ளியெறியப்படும் அபாயமும் உருவாகும். ஒரு பாரிய பின்னடைவின் பிற்பாடு, தற்போதைய சர்வதேசப் பின்னணியில் புலிகளின் வெளிப்பாடு என்பது தற்போதைக்கு சாதகமாக அமையாது என்பது தற்போதைய யதார்த்தநிலை.

அத்தோடு,

முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டம் தொடர்ந்திருந்தபோதும், சர்வதேசத்தின் பார்வையில் ஏற்படாத தமிழர் சார்பான மாற்றம் தற்பொழுது ஏற்பட்டுவருகின்றது என்றே சொல்லவேண்டும். சர்வதேச மட்டத்தில் இத்தகைய மாற்றம் ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு அது ஆதரவினை அளிக்கக்கூடியதான சாத்தியங்கள் ஏற்படக்கூடும்.

இதனால் தீர்க்க தரிசனமிக்க தலைவர் அவர்கள் எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு மீண்டுமொரு சாதகமான நிலைமையில் அல்லது தீர்க்க தரிசனமிக்க அவரது கணிப்புப்படி.. தகுந்த சமயத்திலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்றே எதிர்பார்க்கலாம். அவர் வெளிப்படுவதற்கான புறச்சூழ்நிலைகள் இன்னும் உருவாகாத நிலையில் வருகின்ற மாவீரர்தினம் எவ்வாறு அமையப்போகின்றது?… எவ்வாறு அமைய வேண்டும்?? …. என்பது பற்றிப் பார்ப்போம்.

"மாவீரர் தினம்" என்பது தமிழீழ வரலாற்றில் என்றுமே முக்கியத்துவமிக்க, தமிழரின் வாழ்வோடு ஒன்றிப்போய்விட்ட தினம். இன்னும் எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் கடைசி ஈழத்தமிழன் உயிர்வாழும் வரைக்கும் நினைவு கூரப்படும் இந்த புனித நாள். தன் இனத்துக்காக தம் சுய ஆசாபாசங்களை மறந்து தம் இன்னுயிரையும் துறந்த தியாகத்தின் சிகரங்களை நினைவுகூர நமக்கு வரமாக கொடுக்கப்பட்ட மாவீரர் தினத்தினை இம்முறை ஒரு வித்தியாசமான உணர்வுகளோடு, எதிர்பார்ப்புகளோடு எதிர்கொள்ளக் காத்திருக்கின்றது ஒட்டுமொத்த தமிழினமும். நம் தேசத்தின், நம் இனத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் கல்லறைகள் இன்று மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கின்றன.

அவை இருந்த அடையாளமே தெரியாமல் துடைத்தழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாவீரச் செல்வங்கள் நமது பிள்ளைகள், நமது சகோதரங்கள், நமது உறவுகள். இவர்களின் தியாகங்களை வெறும் வார்த்தைகளால் விபரிக்கமுடியாது. தம் வாழ்வையும் உயிரையும் தன் இனத்துக்காகவே கொடுத்த வீரபுருஷர்கள் இவர்கள். தமிழன் என்று சொல்லி நம்மை தலைநிமிர வைத்தவர்கள். இம்மாவீரர்களின் நினைவு நாளை எழுச்சியோடு அனுஷ்டிக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனதும் தார்மீகக் கடமை. ஆனால் இக்கடமை என்பதனையும் தாண்டி, இம்முறை நாம் மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கப்போகும் முறையினால் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் பலமான செய்தியொன்றினை சொல்லவேண்டியுள்ளது.

அதாவது, சர்வதேசத்தாலும், சிங்களத்தாலும் "பயங்கரவாதிகள்" என பொய்முத்திரை குத்தப்பட்ட விடுதலைப் புலிகள், நம் மாவீரர்கள் ஏதோ விண்வெளியிலிருந்து குதித்தவர்கள் அல்லர். நமது சொந்த உறவுகள். தம் இனத்தின் அவலத்தினைக் கண்ணுற்று தாங்கமுடியாமல் போராட புறப்பட்டவர்கள். நமக்காகவே தம்முயிரையும் துச்சமென நினைத்து தியாகம் பண்ணியவர்கள். அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை. நம் விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள். அவர்கள் சுமந்த விடுதலைக் கனவைத்தான் நாமும் சுமக்கின்றோம். தமிழீழத் தாயகம் என்பது புலிகளின் தாகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஈழத் தமிழரினதும் தாகமும் வேட்கையும் அதுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுவோம். இதுவரை நாட்களும் நாம் தொடர்ந்த போராட்டங்கள்தான் சர்வதேச மட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது.

மாவீரர் தினத்தினை நாம் உணர்வெழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பதன்மூலம் சர்வதேசத்திற்கு பல விடயங்களினைப் புரியவைக்க முடியும். தலைவரின் வருகை என்ற விடயத்தில் நாம் தற்போதைக்கு கவனத்தினைச் செலுத்தாது, அவர் வழிகாட்டிய வழி தொடர்ந்து நம் வரலாற்றுக் கடமையை சரிவரத் தொடர்வோம். புலிகள் இல்லாத வெற்றிடத்தினை நாம் நன்கே உணர்கின்றோம். அவர்களின் மீள்வரவென்பதும் நமது கைகளில் உள்ள நிலையில் சர்வதேசத்தின் நிலைப்பாடுகளில் சாதகமான மாற்றத்தினைக் கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை உணர்ந்தவர்களாய் இம்முறை மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கத் தயாராவோம்! மாவீரர்கள் சுமந்த இலட்சியக்கனவினை நிறைவேற்றும்வரை ஓயாமல் போராடுவோம் என உறுதியெடுப்போம்!

"மாவீரர்களை நாம் புதைக்கவில்லை… விதைத்திருக்கின்றோம்"

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

-பருத்தியன்


source:tamilspy

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP