சமீபத்திய பதிவுகள்

பத்திரிகை துறையில் வெற்றிக்கொடி நாட்டிய "மலையாள மனோரமா' ஆசிரியர்கே.எம்.மாத்யூ

>> Tuesday, August 3, 2010


இந்திய பத்திரிகை உலகின் ஜாம்பவானும், மலையாள மனோரமா நாளிதழின் முதன்மை ஆசிரியருமான கே.எம்.மாத்யூ (93) காலமானார். கேரள மாநிலம் கோட்டயம் குஞ்ஞிக்குழி பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று மாலை புத்தன் பள்ளியில் நடந்தது.


மறைந்த கே.எம்.மாத்யூ 1917ம் ஆண்டு ஜன., 2ம் தேதி கண்டத்தில் கே.சி.மாம்மன் மாப்பிள்ளை மற்றும் குஞ்ஞாண்டம்மா (மாம்மி) ஆகியோரது 8வது மகனாக பிறந்தார். கல்வியை முடித்த அவர் 1954ல் மலையாள மனோரமா நாளிதழின் நிர்வாக இயக்குனராகவும், பொது மேலாளராகவும் பதவி ஏற்றார். அவரது சகோதரன் கே.எம்.செரியனின் மறைவை அடுத்து, 1973ல் அவர் இந் நாளிதழின் முதன்மை ஆசியராக பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற போது மலையாள மனோரமா நாளிதழ் விற்பனை வெறும் 30 ஆயிரம் பிரதிகளாக இருந்தது. அதுவும் கோட்டயம் நகரில் மட்டுமே அந்நாளிதழ் அச்சிடப் பட்டு வந்தது. அதை தற்போது 18 லட்சம் பிரதிகளாக மாற்றி காட்டிய பெருமை அவரையே சேரும். அதற்காக அவர் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்.


கேரளத்தில் கோட்டயம் நகரில் மட்டுமே அச்சாகி வந்த நாளிதழை, அவர், மாநிலத்தில் 10 மாவட்டங்களிலும் அச்சிட வழி வகுத்தார். மேலும், மாநிலத்தை விட்டு சென்னை, பெங்களூரு, மங்களூரு, டில்லி, மும்பை ஆகிய வெளி மாநில நகரங்களிலும், பக்ரைன், துபாய் ஆகிய அரபு நாடுகளிலும் பதிப்புக்களை துவக்கி சாதனை படைத்தார். மலையாள மனோரமா நாளிதழ் மட்டுமல்லாமல் எம்.எம்.பப்ளிகேஷன்ஸ் சார்பில், மலையாள மனோரமா வார இதழ், மகளிருக்காக வனிதா, பாஷாபோஷினி, ஆங்கிலத்தில் தி வீக், குழந்தைகளுக்காக பாலரமா ஆகிய இதழ்களையும் அவர் துவக்கினார். இது தவிர சில ஆண்டுகளுக்கு முன் எம்.எம்.மியூசிக், மலையாள மனோரமா தொலைக்காட்சி சேனல், மாம்கோ பண்பலை வானொலி ஆகியவற்றையும் அவர் துவக்கி அனைத்திலும் வெற்றி கண்டார். பத்திரிகைத் துறை என்றில்லாமல், தகவல் துறையில் அவருக்கு நிகர் அவரே என்ற புதிய சாதனையையும் அவர் பல ஆண்டுகளாக சாதித்து வந்தார்.


பத்திரிகை துறையில் அவரது சாதனைகளை பாராட்டி மத்திய அரசு அவருக்கு 1998ம் ஆண்டு பத்மவிபூஷண் விருது வழங்கி பாராட்டியது. அவரை போலவே அவருக்கு அமைந்த அவரது துணைவியார் அன்னம்மாவும் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். அவர் 2003ல் காலமாகும் வரை வனிதா இதழின் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதிகளுக்கு மாம்மன் மாத்யூ, பிலிப் மாத்யூ, ஜேக்கப் மாத்யூ மகன்களும் மற்றும் மகள் தங்கம் மாம்மன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் மாம்மன் மாத்யூ மலையாள மனோரமா நாளிதழின் ஆசிரியராகவும், பிலிப் மாத்யூ இந்நாளிதழின் நிர்வாக ஆசிரியராகவும், செயல் ஆசிரியராக (எக்ஸ்க்யூட்டிவ் எடிட்டர்) ஜேக்கப் மாத்யூ ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இவர்களது மனைவியர் முறையே பிரேமா மாம்மன் மாத்யூ வனிதா இதழின் ஆசிரியராகவும், பீனா பிலிப் மாத்யூ பாலரமா இதழின் ஆசிரியராகவும், அம்மு ஜேக்கப் மாத்யூ மாஜிக்பேட் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களை தவிர சி.சி.எஸ்.டெக்னாலஜிஸ் மற்றும் மிஸ்டர் பட்லேர்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரான சி.பி.மாம்மன் என்பவர் இவரது மருமகன்.


கடைசி துடிப்பு வரை பத்திரிகை வளர்ச்சி தான்: "மாத்துக்குட்டி அச்சாயன்' என்று அனைவராலும் மரியாதையாகவும்,அன்பாகவும் அழைக்கப்பட்ட மலையாள மனோரமா நாளிதழின்முதன்மை ஆசிரியர் கே.எம். மாத்யூ தனது உயிரின் கடைசி துடிப்பு வரைபத்திரிகை வளர்ச்சி குறித்தே சிந்தித்து வந்தார். கோட்டயத்தில் தனது, "ரூப்கலா' வீட்டில் கே.எம். மாத்யூ கடந்த 31ம்தேதி காலை உணவு முடித்துக் கொண்டு டாக்டர்களின் அறிவுரைப்படிசிறிது நேரம் ஓய்வெடுத்தார். காலை.11.30 மணிக்கு வீட்டில் இருந்துபுறப்பட்டு மலையாள மனோரமா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வழக்கம்போல் நடைபெறும் ஆசிரியர்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். சிலஆலோசனைகளை அவர் அப்போது வழங்கினார். அதன் பின், பிற்பகல் ஒரு மணியளவில் வீடுதிரும்பினார். மதிய உணவுக்கு பின் மீண்டும்அவர் ஓய்வெடுத்தார். மாலையில் பேரக்குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடி அவர்களைமகிழ்வித்தார். அவரது மகன்கள் மாம்மன் மாத்யூ,ஜேக்கப் மாத்யூ ஆகியோருடன் குடும்ப விஷயங்கள் பேசினார். மாலை 5 முதல் இரவு 7 மணி வரை மீண்டும் பத்திரிகைகள் குறித்து அலச துவங்கினார்.


அவரது செயலரிடம் மறுநாள் நாளிதழில் வெளியாக உள்ள தலையங்க பக்கம், நான்காம் பக்க கட்டுரைகள் குறித்து கேட்டறிந்தார். அது தவிர, அன்றைய தினம் வெளியானசில நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்ட சில செய்திகள் குறித்து கருத்து கேட்டறிந்தார். இரவு 7.45 மணிக்கு பிரார்த்தனை முடித்து ஐந்து நிமிடங்கள்சங்கீர்த்தனம் செய்தார். இரவு 8 மணிக்கு கஞ்சியும், மீன்கறியும், ஊறுகாயுடன் உணவை முடித்துக் கொண்ட அவர் இரண்டு மணிநேரம்தொலைக்காட்சிகளில் செய்திகளை பார்த்தார். இரவு 10 மணிக்கு உறங்கச் சென்றார். அவருடன் உதவியாளர் அனியன் என்பவர் இருந்தார். அதிகாலை 5.45 மணிக்கு எழுந்த அவர் சிறிதுகுடிநீர் பருகினார். பின், அவர் உதவியாளரிடம், "அதிகமாக குளிருகிறது.மின்விசிறியை "ஆப்' செய்து விடுங்கள்' என்றார். அப்போது அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. உடனே அவரது உதவியாளர் அவரை மெதுவாக படுக்கையில் கிடத்தினார். டாக்டருக்கு தகவல் பறந்தது. டாக்டர் கே.சி.மாம்மன் வந்து பார்த்தார். அதற்குள் அவர் காலமாகி விட்டார். காலை 6 மணியளவில் மரணம் சம்பவித்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் கெடாமல் இருக்க "எம்பாம்' செய்யப்பட்டு மீண்டும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.


கணவனின் வெற்றிக்கு பின்னால் மனைவி: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பதுஉலக நியதியாக இருந்து வருகிறது. இந்த நியதி மலையாள மனோரமா நாளிதழ் ஆசிரியர் கே.எம்.மாத்யூவின் வாழ்க்கையிலும் நடந்தது. அவரது மனைவி அன்னம்மா மாத்யூ. இவர்களது திருமணம் 1942ம்ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி நடந்தது. மலையாள மனோரமா நாளிதழின் சீப் எடிட்டரான கே.எம். மாத்யூவெற்றிக்கு பின் துணையாக இருந்தது அவரது மனைவியே தான். பத்திரிகையில் வரும் செய்திகளை சாதாரண வாசகர்களும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அவரது செய்திகள் இடம் பெற்றது அந்நாளிதழின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்தது எனலாம். ஒரு நாளிதழை அனைத்து தரப்பினரும் விரும்பி படிக்கவேண்டும்என்பதற்காக அதற்கான பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்.


எவ்வளவு பணிகள் இருந்தாலும் தம்பதிகள் இடையே இருந்துவந்த அன்பும், பாசமும் கடைசிவரை மாறவே இல்லை.கணவனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இன்முகத்துடன் சிரமம் பாராமல் உழைத்து வந்தார் அவரது மனைவி. ஒரு கட்டத்தில்மனைவியின் உடல் நலம் குன்றி நடக்க முடியாத நிலை ஏற்பட்டபோது,சக்கர நாற்காலியில் மனைவியை அழைத்துச் சென்று வந்தவர் கணவர். பத்திரிகை துறையில் மனைவிக்கு இருந்த ஆர்வத்தையும், மகளிருக்கு தேவையான தகவல்களை அளிக்கவேண்டும் என்பதற்காகவும்,மகளிர் முன்னேற்றத்திற்காகவும் மலையாள மனோரமா துவக்கிய,வனிதா இதழின் ஆசிரியராக அன்னம்மா மாத்யூ அமர்த்தப்பட்டார்.


கடந்த 2003ம் ஆண்டு அன்னம்மா மாத்யூ மறைந்தார். அவரதுமறைவிற்கு பின், கே.எம். மாத்யூ தளர்ந்து போனார்."எட்டாவது மோதிரம்' என்ற தனது சுயசரிதையில் இது குறித்துகே.எம். மாத்யூ விளக்கி உள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததில் 99 சதவீதமும் இறைவன் அருளால் நடந்தது. மீதமுள்ள 1 சதவீதம்மட்டும் தான் அவர் செய்தது என்று நம்பினார்.அந்த 1 சதவீத பணியையும் நாம் ஆத்மார்த்தமாகவும், அர்ப்பணிப்புஉணர்வோடும், பணிவோடும் செயல்பட்டே தீரவேண்டும். நம் எதையும் நிச்சயிக்க முடியாது என்பதை நாம் உணரும்பட்சத்தில் நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஆணவமோ, அகங்காரமோ இருக்காது'என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


source:dinamaalr

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP