சமூக வலைதளங்களால் இளைஞர்களுக்கு ஆபத்து
>> Saturday, September 17, 2011
தொலைத்தொடர்புத் துறையில், இன்று பெரும் பங்கு வகிக்கும், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும், பதிவுகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பதிவுகளை வெளியிடுவதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரும் என்று, வலைதள வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வி, வணிகம், திருமணம், வேலைவாய்ப்பு போன்ற எந்த ஒரு விஷயங்களுக்கும், தேவையான தகவல்களைத் தருவதில், இணையதளங்கள் முன்னணியில் உள்ளன. அதனால், நவீன உலகில் உடனுக்குடன் தகவல்களை பெற, இணையதளத்தை மக்கள் அதிகமாக நாடிச் செல்கின்றனர். தொலை தூரக் கல்வியிலிருந்து மாறி, இணையதளத்தில், "ஆன்-லைன்' கல்வி கற்கும் நிலையும் வந்துவிட்டது.இத்தகைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், தற்போது இளம் தலைமுறையினரை சுண்டியிழுக்க, "சோஷியல் நெட்வொர்க்ஸ்' என்கிற சமூக வலைதளங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு வலைதளமும், போட்டி போட்டு தொழில்நுட்ப வசதிகளைத் தருகின்றன.
கடந்த ஐந்தாண்டுகளாக, இணையத்தில் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பிரபலமான "பேஸ்புக், ஆர்குட்' போன்ற நான்காயிரம் சமூக வலைதளங்கள், இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில், செக்ஸ் மற்றும் ஆபாச தகவல்களுக்காக மட்டும் 3,000 வலைதளங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் துவங்கி, ஆபாச தகவல்கள் படிப்படியாக, பல்வேறு இணையதளங்களின் வழியே நீண்டுக் கொண்டு செல்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, ஒரு புறம் நன்மைக்காக பயன்பட்டாலும், இன்றைய தலைமுறையினரை தவறான வழியில் சீரழிப்பதாகவும் மாறியுள்ளது.
இதுகுறித்து, "பேஸ்புக்' வலைதளத்தின், சென்னை அலுவலக ஒருங்கிணைப்பாளர் வசந்த் கூறியதாவது:"பேஸ்புக்'கில் பல லட்சம் உறுப்பினர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இது, தற்போது ஒரு குழுமம் அல்லது தனிநபர் பற்றிய தகவல்களின் தொகுப்பு இணையமாக, முதலிடத்தில் உள்ளது. மற்ற, "ஆர்குட், ஹை பைவ், ட்விட்டர்' போன்ற நெட்வொர்க்குகளும், சமமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களை சுண்டியிழுக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளன. இவற்றின் மீது, தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாச தளங்களை பார்க்க, எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்படாததால், பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.இவ்வாறு வசந்த் கூறினார்.
எச்சரிக்கை... : சமூக வலைதள உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை:
* சமூக வலைதளத்தில், உங்களது சுய விவரங்கள் முழுவதையும், அனைவரும் பார்க்கும்படி வெளியிட வேண்டாம். ஏனெனில், "பேஸ் புக்' வலைதளத்தில், "ஸ்பை' என்ற பட்டனை "கிளிக்' செய்தால், உங்களது சுய விவரம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள முடியும். எனவே, எச்சரிக்கையுடன், உங்கள் பதிவுகளை வெளியிட வேண்டும்.
* தெரியாத நபருடன் வலைதள நண்பராக இணைவதைத் தவிருங்கள்.
* புகைப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகளை, பிறருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
* கவர்ச்சி படங்கள், காட்சிப் பதிவுகளை உங்களது பதிவிலிருந்து நீக்கினால் நல்லது.
* கவர்ச்சியான மற்றும் தனிப்பட்ட குடும்ப மற்றும் பெண் நண்பர்களின் படங்களை வெளியிடுவதால், அதை சிலர் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
source:dinamalar
http://thamilislam.tk
0 கருத்துரைகள்:
Post a Comment