சமீபத்திய பதிவுகள்

சேது சமுத்திரத் திட்டமும் -தடுக்க நினைக்கும் சதிகாரர் கூட்டமும்

>> Saturday, October 25, 2008

 

மிக நீளமான கடற்கரையைக் கொண்ட இந்தியா தனது கடலோர பாதுகாப்பு பணியை செய்வதற்குக் கூட தன்னுடைய மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இருந்து கிழக்குக் கடற்கரைப் பகுதியை அடைய வேண்டுமானால் இலங்கையை சுற்றிக் கொண்டுதான் வரவேண்டும். இது இந்தியப் பாதுகாப்புக்கே ஆபத்தானதாக உள்ளது.


இதற்கு காரணம் தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும், இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள 30 கி.மீ. நீள கடற்பகுதியானது சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாக உள்ளது .


இந்த மணல் மற்றும் பாறைகளால் ஆன மேடுகள் மன்னார் வளைகுடாவையும் (தென்மேற்கு) பாக் ஜலசந்தியையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பகுதியில் கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன.


அதனால்தான் இந்தப் பகுதியைக் கப்பல்கள் கடந்து செல்ல முடியாமல் இலங்கையை சுற்றிக் கொண்டு செல்கின்றன. இதனால் ஏற்டும் பாதகங்கள் இவை,

இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை அதிகரிக்கிறது .

இதனால் போர் போன்ற அவசரக் காலங்களில் கூட இந்தியக் கடற்படை கப்பல்கள் விரைவாகப் இலக்கை அடைய முடியாத நிலை உள்ளது.

சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றின் கடற்பயண தூரம் அதிகரிப்பதால் பயண நேரம் 30 மணிநேரம் வரை அதிகரிக்கிறது.

கூடுதல் எரிபொருள் செலவு ,

அந்நியச் செலாவணி இழப்பு .

கப்பல் வாடகைக் கட்டணம் அதிகரிப்பு.

கிழக்கு கடற்கரை துறைமுகங்கள் எதுவும் வளர்ச்சி அடைய முடியாத் நிலை .


1860- இல் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லர் இந்த மேட்டுப்பகுதிகளை ஆழப்படுத்தி அந்தப் பகுதியைக் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றுவதன் மூலம் இந்தப் பாதிப்புகளை களைய முடியும் என்று ஒரு திட்டத்தை வகுத்தார்.


அந்த திட்டம்தான் சேதுசமுத்திர கப்பல் கால்வாய் திட்டம் என்று அழைக்கப்பட்டு தற்போது வரை முழுமையாக நிறைவேறுவதில் பல இழுபறிகளை சந்தித்து கொண்டுள்ளது.


சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம் என்பது பாக் நீரிணைப்பு மற்றும் தனுஸ்கோடி - தலை மன்னர் இடையே உள்ள மணல் திட்டுப் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே ஆகும்.


சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக குறிப்பிட்ட அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.


சேது சமுத்திரக் கப்பல் கால்வாய் 300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இருக்கும்.. இந்த திட்டத்தில் இராமர் பாலம் அருகே 35 கி.மீ நீளத்திற்கும், பாக் நீரிணைப்பு பகுதியில் 54 கி.மீ நீளத்திற்கு மட்டும் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படுகிர்றது. போதிய ஆழமுள்ள 78 கி.மீ பகுதி ஆழப்படுத்தப்பட தேவையில்லை.


சேது சமுத்திரக் கப்பல் கால்வாய் வழியாக 10 மீ மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் செல்ல முடியும். இந்தக் கால்வாயில் கப்பல்கள் 8 கடல் மைல் வேகத்தில் செல்ல முடியும். 33 மீ அகலமும் 215 மீ நீளமும் 30,000 டன் கொள்ளளவும் கொண்ட கப்பல்கள் இக்கால்வாயைப் பயன்படுத்தலாம்.


இதனால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கப் போகும் நன்மைகள் ஏராளம் ,

கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள வளர்ச்சி பெறாத துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகக்கூடிய பொருட்களுக்கு ஆகும் கப்பல் போக்குவரத்து செலவு குறைவதால் ஏற்றுமதி அதிகரித்து தொழில் வளம் அதிகரிக்கும்.

தமிழகத்தில் நடைபெறும் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்பட்டு , செலவுகளும் குறைக்கப்படும் .

தூத்துக்குடி துறைமுகம் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு , பெருமளவு அந்நிய செலாவணி ஈட்ட முடியும்.

இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அடைந்து வேலைவைப்புகள் பெருகி, தமிழகத்தின் பொருளாதாரம் வளர அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தியக் கடலோர பாதுகாப்பு பலப் படுத்தப்படும். கடலோரக் கண்காணிப்பு இந்திய கடற்பகுதி முலவதற்குமே மேற்கொள்ள முடியும் என்பதால் , கடலோர கடத்தல் , ஊடுருவல் போன்றவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். இந்தியக் கடற்பகுதியின் முழுக் கட்டுப்பாடும் இந்தியக் கடற்படையின் கையில் இருக்கும்.


இவ்வளவு நன்மைகள் உள்ள இந்தத் திட்டத்தைத்தான் மதத்தின் பெயரால் சிலர் தடுத்து நிறுத்த துடிக்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அகழ்வுப்பணிகள் நடத்தப்படும் மணல் திட்டுப் பகுதிகள் புராணத்தில் கூறப்பட்ட ராமர் பாலம் , எனவே அதை இடிக்கக் கூடாது, என்று கூறி போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்று உள்ளனர் .


புராணக்கதையான இராமாயணத்தில் இராமர் கடலைக்கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக வானரங்கள் கட்டிய பாலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாலம் இதுவாக இருக்கலாம் என்ற நம்பிக்கையாலேயே இப்படிக் கூறுகிறார்கள் .


நாசாவின் விண்வெளி புகைப்படத்தில் காணப்படும் இந்த பாலத்தை சில இந்து அமைப்புகள் இதற்கு சான்றாக கருதுகின்றன. ஆனால் நாசா இதை சான்றாக அங்கீகரிப்பதிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.


செப்டம்பர் 2007ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றதிற்கு அளித்த அறிக்கையில் இராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியது.


இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஒரு அங்கமான விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது.


இந்திய நிலப்பொதியியல் கழகம் (geological survey of India) நடத்திய ஆராய்ச்சியில் இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிடப்பட்டு, கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்ந்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கண்டுபிடிக்கப் பட்டது.


நாட்டில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் போதும், புதிய சாலைகள், அரசு கட்டிடங்கள் அமைக்கப் படும் போதும் எத்தனையோ கோவில்களும் , பள்ளிவாசல்களும் , தேவாலயங்களும் இடிக்கப்படுவது இல்லையா?


ராமர் பாலம் என்று அழைக்கப்படும் அந்த மணல் திட்டுப் பகுதிகள் ராமர் கட்டிய பாலமாகவே இருந்தாலும் இன்று அது யாருக்கும் உபயோகமற்றது தானே?


மக்களுக்கு பல நன்மைகள் விளையும் என்ற சூழலில் அந்தப் பாலத்தின் ஒரு சிறிய பகுதியில் அகழ்வுப் பனி மேற்கொள்வதால் என்ன மத நம்பிக்கைக்கு என்ன பாதிப்பு வந்து விடும் ?


சேது சமுத்திரக் கப்பல் கால்வாய் திட்டம் என்பது ராமர் பாலம் என்பதை முழுவதுமாக சிதைக்கப் போவது இல்லையே ?


மக்களுக்கு நன்மைகள் செய்யவே மதங்கள் உள்ளன, அதை விடுத்து மக்களுக்கு வரப் போகும் நன்மைகளை தனது பெயரைக் கூறி தடுக்கும் சதிகாரர்களை , மக்களுக்கு நன்மை செய்வதற்காக அவதாரம் எடுத்த அந்த ராமரே மன்னிக்க மாட்டார் அல்லவா?


இதை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல தமிழக எதிர்க்கட்சித் தலைவரான செல்வி ஜெயலலிதா இந்தத் திட்டத்தை எதிர்த்து, அதனை முடக்க நினைப்பவர்களுக்குத் துணை போவது ஏன் என்று புரியவில்லை


ஏற்கனவே நமது தமிழக மக்கள் மதத்தின் பெயரால் பலவாறாக அடிமைப் படுத்தப் பட்டு பல காலமாக அடிமைகளாக , முன்னேற்றம் அடைய இயலாமல் இருந்தது போதாதா?


தமிழகத்திற்கு மிகவும் பயன் தரக் கூடிய இந்த திட்டம், மீண்டும் மத நம்பிக்கையின் பெயரால் தடுக்கப்படுவதை தற்போது அனுமதித்தால் பின்னர் எக்காலத்திலும் தமிழகம் தலை நிமிர முடியாமல் போய்விடும் என்பது உறுதி.


நன்றி..................
 
நன்றி அறிவிழி
http://arivili.blogspot.com/2008/10/blog-post_23.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP