சமீபத்திய பதிவுகள்

ஆமாம் நான் குழப்பவாதிதான்-‍ரஜினிகாந்த்

>> Wednesday, November 5, 2008

 
 09.11.08  ஹாட் டாபிக்

ப்போ நடக்கும், அப்புறம் நடக்கும்' என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு கடந்த திங்களன்று நடந்தே முடிந்துவிட்டது. நவம்பர் முதல் தேதியன்று, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட கையோடு, யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னுடைய ரசிகர்கள் முன் தோன்றி அவர்களுக்கு அருளாசி வழங்கியிருக்கிறார், சூப்பர் ஸ்டார். ஒகேனக்கல் பேச்சுக்கு கன்னடர்களிடம் வருத்தம், `குசேலன்' படத்தின் தோல்வி, அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் காட்டிய எதிர்ப்பு, அந்தப் படத்தில் பேசிய வசனத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி என தன்னைச் சுற்றி சூறாவளியாகச் சுழன்ற பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு பல தரப்புகளிலும் கிளம்பியிருந்த நிலையில்தான் இந்தச் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது.

தலைமை மன்றத்தில் இருந்து தொலைபேசி மூலமாக இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல் கிடைத்ததும் கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின்  முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவே ரஜினியின் பக்தகோடிகள் குவிந்துவிட்டார்கள். அதிகாலையில் இருந்து மாவட்டவாரியாக நிர்வாகிகள்  மண்டபத்துக்குள் அழைக்கப்பட்டு, ரஜினியிடம் கேட்க விரும்பும் கேள்விகள் எழுதி வாங்கப்பட்டன. அரசியல் தொடர்பான கேள்விகளுக்குத் தடை விதித்திருந்தார்கள். ஆங்கில செய்திச் சேனல்களின் லைவ் வாகனங்கள் உள்பட நிருபர்கள், போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் என கல்யாண மண்டபமே களேபரமானது.

வெளியிலும், மண்டப வளாகத்திலும் காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை அமைதிப்படுத்த முயன்று மைக்கில் கத்திக் கொண்டிருந்தார், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்திய நாராயணா. மண்டபம் அமைந்துள்ள சாலை, போலீஸாரால் சீல் வைக்கப்பட்டது. ரஜினி எப்போது வருவார்? எப்படி வருவார் என எல்லோர் கண்களும் மண்டபத்தின் வாசலை நோக்கி இருக்க, சரியாக பத்து மணிக்கு மண்டபத்துக்குள் உள்ள கெஸ்ட் ஹவுஸில் இருந்து ரஜினி பிரசன்னமானார். தனக்கே உரிய வேகமான நடையில் மண்டபத்துக்குள் நுழைந்து, மேடையில் ஏறி மத்தியில் போடப்பட்டிருந்த நாற்காலியில், `படையப்பா' பாணியில், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார்.

உட்கார்ந்த வேகத்தில் எழுந்து மேடையின் இடது ஓரத்தில் போடப்பட்டிருந்த மைக் அருகே வந்து நின்றார். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பானது. பிறகு பேசத் தொடங்கிய ரஜினி, ``அனைவருக்கும் வணக்கம். உங்கள் எல்லோரையும் இந்த சந்தர்ப்பத்தில் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். நீங்கள் அமைதியாக இருந்தால்... முதலில் உங்களுடன் போட்டோ எடுப்பதாக இருந்தது. ஆனால் கூட்டம் அதிகமாகிவிட்டது. முந்நூறு பேர்தான் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். குரூப் போட்டோ எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒருமுறை சச்சிதானந்தா சுவாமி பேசும்போது, `உங்களுக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியாது. உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன்' என்றார். அந்தக் கூட்டம் ரொம்ப சிறப்பாக நடந்தது. என்ன பிரச்னை யென்றால், எனக்கு அவ்வளவு அறிவு கிடையாது. சத்தி (நாராயணா)  உங்களிடம் சொல்லி கேள்விகள் வாங்கியிருக்கிறார். எதைக் கேட்பது? எதைக் கேட்கக் கூடாது என்றும் அவர் சொல்லியிருக்கிறார். முதலில் மீடியா, பிரஸ் வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் பிரஸ்ஸை அவாய்ட் பண்ண வேண்டாம்; பண்ண முடியாது என்று அழைத்தோம். பிரஸ்ஸில் பத்துப் பேர் இருந்தால், பத்துக்கோடி ஜனங்கள் இருக்கிற மாதிரி இல்லையா? (பலத்த கைதட்டல்).

இது டிஃப்ரண்ட் கான்செப்ட். வெற்றிகரமாக இந்தக் கூட்டத்தை நீங்கள் நடத்திக் கொடுத்தால், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் ஒரு சந்திப்புக் கூட்டம் நடத்தலாம்'' என்றார்.

மேடையின் வலது பக்க மைக்கில் ரஜினியின் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நண்பரும், மேனேஜருமான சுதாகர், ரசிகர்கள் எழுதிக் கொடுத்த ஒவ்வொரு கேள்வியாக வாசிக்க, ரஜினி பதிலளித்தார்.

இந்த இனிய சந்திப்பு தொடருமா? (ரஜினி பாஸ்கர், நாகை மாவட்டம்)

``இதற்கு ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன்.''

உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

``என்னுடைய ஃபேன்ஸ், முதலில் குடும்பத்தைப் பாருங்கள். உங்கள் குடும்பத்தை நீங்கள் பார்த்துக் கொண்டால் சமூகம் உங்களைக் கவனித்துக் கொள்ளும்.''

மனதில் உறுதியுள்ள நூறு இளைஞர்கள் விவேகானந்தருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். நல்ல பாதையை நீங்கள் காட்டுவீர்களா? (சேகர், நெல்லை)

``இதில் சந்தேகம் இல்லை. (பலத்த கரவோசை). நிறையப் பேர் இருக்கிறீர்கள். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது. வழி நடத்த பொறுப்பு ஜாஸ்தி இருக்கணும். ஒழுங்காக வழி நடத்த வேண்டும் . இல்லையென்றால், அமைதியாக இருக்க வேண்டும்.''

தமிழக மக்களின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு நம்முடையது. அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மக்களுக்குச் செய்ய வேண்டிய பணி என்ன? (அமலன், கன்னியாகுமரி)

``எந்தப் பணியையும் இன்னும் முடிவு செய்யவில்லை. என் பணி ஆக்ட் பண்ணுவது. இப்போதைக்கு என் கவனம் `எந்திரன்'தான். அதுபற்றி நான் எதுவும் சொல்லக் கூடாது. இந்த மாதிரி ஒரு படம் இந்தியாவில் வந்ததே இல்லை. இந்தப் படம் பற்றி இந்தியாவே பேசும். பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னார்கள். பொருளாதாரம் இல்லாமல், அப்போது `சிவாஜி' கதையை ஓகே பண்ணினேன். எந்திரனின் பட்ஜெட் 150 கோடி. இது பத்தாது. அதனால்தான், மூன்று மொழியில் எடுக்கிறோம். நிறைய ஃபாரின் டெக்னீஷியன்கள் வேலை செய்கிறார்கள். `எந்திரன்' முடியட்டும்.''

அன்புத் தலைவா, மன்றக் கொடி, மன்றக் கட்டடம், உறுப்பினர் படிவம் இருந்தால் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து இருக்குமே? மாவட்டந்தோறும் நலத்திட்டங்கள் செய்ய ஆவன செய்ய வேண்டும்! (பெரியசாமி, கடலூர்)

``அந்தஸ்தைத் தேடிப் போகக் கூடாது. தானே வரவேண்டும். சுயநலம் இல்லாமல் இருந்தால் அந்தஸ்து தானே வரும். பணம், ஜனங்கள் இரண்டையும் ஒரே இடத்தில் வைக்கக் கூடாது. அது தப்பாயிடும். எதிர்காலத்தில் என்னுடைய நேரடி கண்காணிப்பில் நலத்திட்ட உதவிகளைச் செய்வேன். என்னிடம் யாரும் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் பணத்தையும் எடுக்க மாட்டேன். யாரிடமும் பணம் வாங்க மாட்டேன்.''

விருப்பம் உள்ள அமைப்பில் சேர்ந்து பணியாற்றுங்கள் என்று சொன்னீர்கள். உங்களை விட்டு எந்த அமைப்புக்கும் செல்ல மாட்டோம். (நஸ்ருதீன், வேலூர்)

``நன்றி!'' (பலமாக சிரிக்கிறார். பலத்த கரவோசை)

இலவசத் திருமணங்கள், இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நலத்திட்டங்களை நிறுத்தி விட்டீர்களே?

``முப்பது மாவட்டங்களிலும் இலவசத் திருமணங்கள் நடத்திவிட்டேன். அப்போது தெரிந்து செய்த உதவிகளை இப்போது தெரியாமல் செய்கிறேன்.''

பதிவு செய்யாத மன்றங்களைப் பதிவு செய்ய வேண்டும். புதிய மன்றங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்?

``பதிவு செய்யாத மன்றங்களை நானே உட்கார்ந்து , கவனித்துப் பதிவு செய்யப் போகிறேன். வருஷத்துக்கு மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருந்தேன். இப்போது, படங்கள் செய்வது குறைந்துவிட்டது. அதனால் புதிய மன்றங்களைப் பதிவு செய்ய விரும்பவில்லை.''

ரசிகர் மன்றத்துக்கு எதிராகச் செயல்படும் மன்ற நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

``நன்றி.''

`குசேலன்' தோல்விக்குக் காரணம், கெஸ்ட் ரோலில் நடித்துவிட்டு நீங்கள் வாங்கிய இருபத்தைந்து கோடி ரூபாய் சம்பளம்தான் என்கிறார்கள்?

தீர்க்கமாக யோசிக்கிறார். ரசிகர்கள் கரவோசை எழுப்புகிறார்கள். ``பட பூஜையின் போதே வெறும் இருபத்தைந்து சதவிகிதம்தான் படத்தில் வருகிறேன் என்றேன். அதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்று எனது குரு கே..பி. சார் என்னிடம் சொன்னார். `அந்தப் படத்தைத் தயாரிக்க நானே பணம் தருகிறேன். நாமே ரிலீஸ் செய்யலாம். படத்தின் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு, விநியோகஸ்தர்களுக்கு விற்கலாம் என்று யோசனை சொன்னேன். அதைக் கேட்காமல் தெலுங்கு, மலையாளத் தயாரிப்பாளர்களைச் சேர்த்து, காண்ட்ராக்டில் எனக்கே தெரியாமல் கையெழுத்துப் போட்டுவிட்டார்கள். மூன்று தயாரிப்பாளர்களும் சேர்ந்து எனக்குச் சம்பளம் தந்தார்கள். அது பெரிய தொகைதான். ஆனால் இருபத்தைந்து கோடி இல்லை. படத்தை 62 கோடிக்கு விற்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதை நான் கெடுக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்துவிட்டேன்.

அந்தப்  படத்தை ரசிகர்கள் மறுபடியும் மறுபடியும் பார்த்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். யாரும் அந்தப் படத்தைத் திரும்பப் பார்க்கவில்லை. அந்தப் படத்தின் தலைவிதி அவ்வளவுதான். இதில் நான் எப்படி பொறுப்பாக முடியும்?''

ரசிகர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் சத்தியநாராயணாவை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்!

``கொஞ்ச நாட்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. 88 வயதான அவரது தந்தையும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரையும் சத்திதான் கவனித்துக் கொண்டார். சத்தியை நான்தான் ஓய்வெடுக்கச் சொல்லியிருந்தேன்.''

முதலில் ராகவேந்திரர் சுவாமி என்றீர்கள். பின்னர், அருணாச்சலேஸ்வரர் என்றீர்கள். அப்புறம் பாபா என்கிறீர்கள். ஏன் இந்தக் குழப்பம்? (கணேசன், தஞ்சை)

``கேள்வி கேட்டது யாரு இல. கணேசனா? நான் மதம் மாறவில்லையே? அப்படி மாறினாலும் தப்பே இல்லை. இவர்கள் எல்லாம் ஆன்மிக குருக்கள். என்னை யாரும் வற்புறுத்த முடியாது. நான் ஒரு ஹிந்து. ஆன்மிகத்திலும் பல ஸ்டேஜ் இருக்கு. ஒவ்வொருத்தரையும் தெரிந்து கொள்கிறேன். ஹிந்து தர்மத்தில் பல ஸ்டேஜ் இருக்கிறது. இன்னும் ஆழமா, இன்னும் ஆழமா போய்க்கொண்டிருக்கிறேன். ராகவேந்திரர், ரமணமகரிஷி, பாபா இவர்கள் என் ஆன்மிக குருக்கள்.''

ரஜினி ரசிகர்களின் எதிர்காலம் என்ன? தொடர்ந்து நடிப்பீர்களா?

`` `எந்திரன்'தான் இப்போதை என் எதிர்காலம். தொடர்ந்து நடிப்பேனா என்று தெரியாது. பணத்துக்காகவோ, புகழுக்காகவோ நடிக்க மாட்டேன். தமிழ் மக்களுக்குப் பெருமை தரும் படங்களில் மட்டும் இனி நடிப்பேன்.''

கிருஷ்ணகிரி, நாச்சிக்குப்பம்தான் உங்கள் பூர்வீகம். அங்கு உங்கள் தாய், தந்தைக்கு நினைவிடம் கட்டலாமே?

``நல்ல யோசனை. கண்டிப்பாகச் செய்யலாம்.''

பத்திரிகையாளர்கள் உங்களைக் குழப்பவாதி என்று எழுதுகிறார்களே?

``பத்திரிகையாளர்களை வைத்துக் கொண்டு இந்தக் கேள்வி கேட்கலாமா? சில நேரங்களில் நான் கொஞ்சம் அப்படித்தான் நடந்து கொள்கிறேன். எதிலும் அனுபவம் வரவேண்டும் இல்லையா? தெரிந்தே தப்புச் செய்வது கிடையாது. சுயநலத்துக்காக நான் எதுவும் செய்வது கிடையாது. எனது அறிக்கையைக் குழப்பம் என்கிறார்கள். அந்த நேரத்தில் நான் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் பெரிய குழப்பமே நடந்திருக்கும். புரிந்தவர்களுக்குப் புரியும்; புரியாதவர்களுக்கு நான் குழப்பவாதிதான். நான் முழுச்சிக்கிட்டேன். இனி என்னை யாரும் அப்படிச் சொல்ல முடியாது. சொன்னாலும் ஒன்றும் இல்லை.''

கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்டீர்களா? வருத்தம் தெரிவித்தீர்களா? (உலகநாதன், கோவை)

``நான் முன்னால் போகப் பார்க்கிறேன். நீங்கள் பின்னாலேயே போகிறீர்கள். ஒகேனக்கலுக்கும் சினிமாக்காரர்களுக்கும் சம்பந்தம் கிடையாது. பெங்களூருவில் உள்ள நல்ல தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள்தான் ரிலீஸ் செய்கிறார்கள். கன்னடர்களும் தமிழ்ப் படங்களைத்தான் பார்க்கிறார்கள். அதுதான் அங்குள்ளவர்களுக்கு வயிற்றெரிச்சல். என்ன இருந்தாலும் `உதைக்கணும்' என்று நான் சொல்லியிருக்கக் கூடாது. அது நாகரிகம் இல்லை. அவர்களிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று நான் சொல்லிவிட்டேன். எனது ரசிகர்களும் `வரட்டும்' என்று கையில் கத்தியுடன் இருந்தார்கள். தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் வந்து, `ஏதாவது செய்யுங்கள்' என்று கேட்டார்கள். நம்மால் உருவான பிராப்ளம். நாம்தான் சரி செய்யணும் என்று வருத்தம்தான் தெரிவித்தேன். அதை மன்னிப்பு என்று பத்திரிகைகள் சொல்லிவிட்டார்கள். அதுவும் சுயநலத்துக்காகக் கேட்கவில்லை. பொதுநலத்துக்காகத்தான் கேட்டேன்.''

ரசிகர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

``சினிமா ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என இரண்டு தரப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நீங்கள் கேட்டதால் சண்டை, டான்ஸ், காமெடி என்று வந்துவிட்டேன். எல்லாத்தையும் கலந்து கொடுக்க இப்போ தலையைப் பிச்சிக்கிறேன்.''

பிறந்த நாள் அன்று கூட உங்களைச் சந்திக்க முடியாதா? எங்களுக்கு என்ன செய்வீர்கள்? (ஜோதிகுமார், புதுவை)

``பிறந்த நாளன்று தனிமையில் அமர்ந்து `நான் ஏன் பிறந்தேன்?' என்று யோசிப்பேன். அதற்கே எனக்கு நேரம் சரியாகிவிடும். உங்களைச் சந்திக்க முடியாது. உங்களுக்கு எதைச் செய்தாலும் ஒழுங்காகச் செய்வேன்.''

இதன்பின்னர், கேள்விகள் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.

மீண்டும் பேசத் தொடங்கிய ரஜினி, ``உங்கள் கேள்விகளுக்கு ஹேட்ஸ் ஆஃப்! வருஷா வருஷம் இது மாதிரி ஒரு சந்திப்பு இருக்கும். (கைதட்டல்). நாளைக்கு (செவ்வாய்) `சுல்தான்' ஷூட்டிங் இருக்கு. பதினான்காம் தேதி ஹைதராபாத்திலும் சென்னையிலும் `எந்திரன்' ஷூட்டிங். மேடையில் `கடமையைச் செய் பலனை எதிர் பார்' என்று எழுதியிருக்கிறேன். `பலனை எதிர்பார்க்காதே' என்று கண்ணன் சொன்னதை நானும் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அவர் சொன்னது மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு. நமக்கல்ல. வெளிநாடுகளிலும் `பலனை எதிர் பார்' என்றுதான் சொல்கிறார்கள். அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அரசியலில் திறமை, புத்திசாலித்தனம், உழைப்பு இருந்தால் மட்டும் போதாது. நேரம், சந்தர்ப்பம், சூழ்நிலை இருந்தால் வெற்றி கிடைக்கும். 1996-ல் எனக்கு (நாற்காலியைக் காட்டி) `சீட் இருக்கு உட்காருங்கள்' என்றார்கள். யாரோ வெற்றியில் எனக்கு சீட் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

யாரிடமும் ஸ்டைல் பண்ணி சான்ஸ் கேட்டு சினிமாவுக்கு வரவில்லை. ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் இரண்டு வருஷம் படித்து சினிமாவைக் கற்றுக் கொண்டுதான் சினிமாவுக்கு வந்தேன். பலவந்தமாக அரசியலுக்குச் செல்வது, கட்டாயத் திருமணம் போலாகிவிடும். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன். ஆண்டவன் கட்டுப்பாட்டில் நானிருக்கிறேன். கடவுள் சொன்னால் நாளைக்கே நான் தயார்!'' என்று ரஜினி முடித்ததும் தேசியகீதம் ஒலித்தது. பாட்டு முடிந்ததும் மின்னலென நடந்து மீண்டும் கெஸ்ட் ஹவுஸுக்குள் நுழைந்துவிட்டார்.

``குசேலன் தோல்வி மற்றும் கன்னடர்களிடம் வருத்தம் கேட்ட விவகாரத்தில் உங்கள் இமேஜில் சற்று சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. பெரிய அளவில் தயாரிக்கப்படும் `எந்திரன்' படத்தின் வியாபாரம் இதனால் பாதிக்கக் கூடும் என்று, அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த பிரஷரால்தான் இந்தச் சந்திப்புக்கு ரஜினி ஓகே சொல்லியிருக்கிறார்'' என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரே நம் காதில் போட்டுச் சென்றார்கள்.

இதற்கிடையே, ரசிகர்களுக்கு சாம்பர் சாதமும் தயிர் சாதமும் மதிய உணவாக வழங்கப்பட்டது. கெஸ்ட் ஹவுஸுக்குள் சென்ற ரஜினியிடம் பேட்டி எடுக்க நிருபர்களும், போட்டோ எடுக்க ரசிகர்களும் நீண்ட நேரம் காத்துக் கிடந்தார்கள். கடைசி வரை ரஜினி வெளியே வரவே இல்லை. இந்த இரு தரப்பினரின் காத்திருப்பு இனி தொடரும்!

ஸீ வெற்றி
படங்கள் : ஞானமணி

source:kumudam.com

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP