சமீபத்திய பதிவுகள்

இலங்கையின் உள்விவகாரத்திலும் வேறு எவரும் தலையிட முடியாது

>> Wednesday, January 28, 2009

 
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியாக இருக்கட்டும் அல்லது வேறு எவராவது இருக்கட்டும் வரலாம் போகலாம் யுத்தம் நிறுத்தப்பட மாட்டாது. புலிகளை ஒடுக்குவதற்கான யுத்தத்தில் 95 வீதம் முடிவடைந்து விட்டது. 5 வீதமே எஞ்சியிருக்கிறது. அதனையும் முடித்த பின்பே யுத்தம் நிறுத்தப்படும். இலங்கை எந்த நாட்டு உள்விவகாரத்திலும் தலையிடுவதில்லை. அதுபோல் இலங்கையின் உள்விவகாரத்திலும் வேறு எவரும் தலையிட முடியாது.


இதனை யார் கூறியிருப்பார் எங்கே கூறியிருப்பார் எப்போது கூறியிருப்பார் எனக் கண்டு பிடிப்பது ஒன்றும் கடினமான ஒன்று அல்ல.

இதனை வேறுஎவரும் கூறவில்லை. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்த போது இன்று (ஜன27) கூறியிருக்கிறார். இலங்கையின் அண்மைக்கால யுத்த முன்னேற்றங்கள் மற்றும் நாட்டின் அரசியல் நிலை என்பன குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி இடையிட்டு சந்திப்பது வழக்கம்.


ஊடகவியலாளர்களைக் கையாள்வதற்கு பல வழிமுறைகளை ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் வைத்திருக்கின்றன. அதில் ஒரு வழிமுறைதான் அன்பாக அழைத்து தேநீர் கொடுத்து, உணவு கொடுத்து நட்பு ரீதியாக சம்பாசித்தல். ஏனைய வழிமுறைகளைப் பற்றி நான் கூறத் தேவையில்லை.


இவ்வாறு அழைப்பவர்களுடனும் இருவழிகளில் ஜனாதிபதி சம்பாசணை நடத்துவார். ஓன்று நீள்வடிவத்தில் அமைந்த நீண்ட மேசையில் நடுநாயகமாக இருந்து எல்லோருடனும் அளவளாவுவது. இது பொதுவான உரையாடல். கேள்வி பதில் என நட்புடன்(?) நீண்டு செல்லும் இந்த உரையாடல்.


மற்றைய வழிமுறை தன்னுடன் நெருக்கமான ஊடகவியலாளர்களுடன் மனம்விட்டு உரையாடுதல். இது பொதுவான உரையாடலின் முடிவில் இடம்பெறுவது. இதிலேதான் உள்ளத்தை உள்ளபடி அவிழ்த்து விடுவார் மகிந்த.


இன்றைய பொதுவான சந்திப்பில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முடியும் தறுவாயில் உள்ளது. அதேநேரம் பயனுள்ள அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்க உள்ளது. அத்துடன் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டிய தேவையும் உண்டு எனப் பலவிடயங்களைப் பேசி அரசியல் தீர்வில் கடுமையான ஈடுபாடு கொண்டவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் ஜனாதிபதி.


ஆனால் இச்சந்திப்பு முடிந்த பிற்பாடு தனக்கு நெருக்கமானவர்களிடம் தனியாகப் பேசும் போது எவர் வந்தாலும் எந்த அழுத்தத்தைக் கொடுத்தாலும் யுத்தம் நிறுத்தப்பட மாட்டாது. எனக் கூறியிருக்கிறார்.


இவ்வாறான பல முகங்கள் ஜனாதிபதிக்கு இருப்பதனை பலர் இப்போது தான் புரிந்திருக்கிறார்கள். மனித உரிமைவாதி, தொழிற்சங்கவாதி, சட்டத்தரணி, நாடக நடிகர், திரைப்பட நடிகர், நண்பர்களின் நண்பன், தோழர்களின் தோழன், ஊடகவியலாளர்களின் சகபாடி என்ற பக்கங்களை மட்டுமே பலர் தெரிந்து வைத்திருந்தார்கள்.


மறுபக்கம் மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கின்ற, தொழிற்சங்கங்கப் போராட்டங்களை அடககுகின்ற, தொழிற்சங்கவாதிகளை சிறையில் தள்ளுகின்ற, ஊடகவியலாளர்களை கொல்லுகின்ற, அல்லது அவர்களை துரத்தி அடிக்கின்ற அரசாங்கத்தின் தலைவர் என்பதும் - தனது வெற்றிக்காக அல்லும் பகலும் உழைத்தவர்களையே துன்புறுத்தும்;, தனது தோழர்களையே மிரட்டும் அரசாங்கத்தின் - அதன் சகாக்களின் தலைவர் என்பதும் மதமுலன மகிந்தராஜபக்ஸ என்பதும் இப்போதுதான் புரிகிறது.


சிலவேளை விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மகிந்தவின் ஒருபக்கம்தான் தெரிந்ததோ தெரியவில்லை? அதனாற்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் தனது மாவீரர் தின உரையில் யதார்த்தவாதி என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைக் கூறினாரோ எனக் கேள்வி எழுகிறது.


இவ்வாறான ஒரு பின்னணியிற்தான் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்;று ஜனாதிபதி மகிந்த ராஜக்ஸவை சந்திக்கிறார்.


நீண்ட நாட்களாக காலத்தைக் கடத்தி வந்த இந்திய அரசு தமிழக அரசியல் தலைவர்களின் நீண்ட கால வலியுறுத்தல்களின் பின்பு வன்னியில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குக் கடும் ஆட்சேபனை தெரிவிப்பது போலான பாணியில் திடீரென பிரணாப் முகர்ஜியை அனுப்பி வைத்துள்ளது.


ஏற்கனவே யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின் தமிழகத்தின் அழுத்தங்களினால் வெளியுறுவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் பாதுகாப்புச் செயலர் விஜயசிங் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் என தூதர்களை அனுப்பி தனது வழமையான ராஜதந்திரத்தைக் கையாண்டிருந்தது.


இந்தத் தூதுவர்கள் செல்லும் போதெல்லாம் ஏதோ தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான பிரயத்தனமாக இந்தியத் தரப்புக்கள் பிரச்சாரப் படுத்தின.


ஆனால் இலங்கை அரசாங்கமோ ஒவ்வொரு தடவையும் தமது அழைப்பின் பேரிலேயே இவர்கள் இலங்கை வருவதாக அறிக்கைகளை விடுத்து வருகின்றது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் சென்ற இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர்மேனன் யுத்தத்தை நிறுத்தும்படி தம்மிடம் எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்திருந்தார்.


அத்துடன் பயங்கரவாதத்திற்கான போரையும் இந்தியா ஆதரரிப்பதாக தெரிவித்ததாகவும் அதில் ஈட்டப்படும் வெற்றிகள் குறித்து பாராட்டுத் தெரிவித்திருந்ததாகவும் ரோகித போகொல்லாகம தெரிவித்திருந்தார்.


இந்த அறிக்கையினை இந்தியத் தரப்பு எந்த இடத்திலும் மறுத்திருக்கவில்லை. இப்போதும் கூட இலங்கை வந்துள்ள பிரணாப் முகர்ஜி, 'விடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது' எனக் கூறியுள்ளார்.


தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது. எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் இந்தியாவுக்கு கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இந்தியா கருணை கொள்ளவில்லை.


இலங்கைப் பிரச்சினை மிகவும் கவலை அளிக்கிறது. அங்கு தமிழர்கள் படும் அவலம் வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து தலைவர்கள் தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கையை ஏற்று இன்று இலங்கை செல்கிறேன்.


இலங்கைப் பிரச்சினை குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவது குறித்து தமிழக தலைவர்களுடன் ஆலோசித்துள்ளதாகவும் முகர்ஜி தெரிவித்திருந்தார்.


ஆனால், தமிழ் மக்களின் அவலத்தில் நெஞ்சுருகும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்ற பொழுதே காயப்பட்டவர்களை ஏற்றச் சென்ற நோயாளர் வண்டிகள் வெறுமனே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கடுமையான சண்டை தொடர்வதனால் வாகனங்கள் புதுக்குடியிருப்பிற்கு செல்ல முடியாது திரும்பியுள்ளன.


மறுபுறமாக இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்புவதற்கான யுத்த டாங்கிகள் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே தமிழகத்தினுடாக பல டாங்கிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.


நவீன றாடர் வசதிகள் மற்றும் படைத்தரப்பு தொழில் நுட்ப உதவிகள் யுத்த தளபாடங்கள், கடற்கண்காணிப்பு பொறிமுறை, ஆகாய கண்காணிப்புப் பொறிமுறை என பலதரப்பட்ட உதவிகளை வழங்கிவரும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து கவலை வெளியிட்டு அதனைக் கருத்திற் கொண்டே இலங்கை செல்வதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். என்ன அற்புதமான செயற்பாடு!


ஆக, மீண்டும் வழமைபோல் ஒரு பம்மாத்து அரங்கேறியிருக்கிறது. தமிழகத்தின் எழுச்சி அரசியல் தலைவர்களின் அழுத்தம் என்பவற்றை அணைப்பதற்கான ஒரு பயணமாக முகர்ஜியின் பயணம் அமைந்திருக்கிறது.


அது போலவே ஒருபுறம் தமக்கு எதிரான ஊடகவியலாளர் லசந்தவைக் கொன்று அதனைத் திசை திருப்ப தமக்கு மிகவும் விசுவாசமான மற்றும் ஒரு ஊடகவியலாளரை அடிக்கின்ற மாதிரி அடித்தும், எவர் வந்தாலும் வந்து போகட்டும் யுத்தம் தொடரும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியும் மறுபுறத்தில் அரசியல் தீர்வே முதன்மையானது என மற்றைய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் இருக்கிறார் ஜனாதிபதி.


இவை யாவும் எமக்குப் புலப்படுத்துவது என்ன?


கடந்த காலத்தின் அரசியல் செயற்பாடுகள் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தென்னாசிய பிராந்தியம் குறித்த, குறிப்பாக இந்தியா தொடர்பான அணுகு முறைகள் என்ன? சர்வதேசம் குறித்த நிலைப்பாடுகள் என்ன? இவை தொடர்பான தெளிவான அல்லது நிலையான அரசியற் கோட்பாட்டு நடைமுறைகள் எம்மிடம் இருந்தனவா? மாறிவரும் பூகோளமயமாதலில் எமது செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டனவா? என்ற கேள்விகள் எழுகின்றன.


ஆயினும் இவைகுறித்து இப்போ சிந்திக்க அல்லது விவாதிக்க நேரமில்லை என பலரும் முணுமுணுப்பது புரிகிறது. என்ன செய்வது காலம் கடந்தும் இப்போதாவது இவை குறித்து நாம் கேள்வி எழுப்பாவிட்டால் அல்லது விவாதிக்காவிட்டால் இனி எப்போதுமே அவற்றை செய்ய முடியாது போய்விடும்.
http://www.swisstamilweb.com/

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP