சமீபத்திய பதிவுகள்

இந்து மதமும் பெண்களும் (பாகம் 2)

>> Wednesday, October 1, 2008

மணமுடிக்கப் போகின்றவளை ஏற்கனவே பலருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம்.

இனி எம்மை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப் படுத்துகின்ற இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம்.

மதத்தை தாய் தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுகின்ற பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்களுடைய பார்வையில் மதம் என்பது தாய் தந்தை போன்றது. எப்படி நாம் தாய் தந்தையை மாற்ற மாட்டோமோ, எப்படி நாம் தாய் தந்தை மீது சந்தேகம் கொள்ள மாட்டோமோ அதே போன்று மதத்தை மாற்றவோ, அதன் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது என்பது அவர்களுடைய வாதம்.

மதம் மாறுவது எனக்கும் ஏற்புடையது அன்று. ஒரு குப்பையில் இருந்து இன்னொரு குப்பைக்குள் போவது முட்டாள்தனமானது. மதங்கள் என்ற குப்பைகளை விட்டு வெளியே வந்த நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

ஆனால் மதம் மாறக் கூடாது, மதம் பற்றி கேள்வி எழுப்பக் கூடாது என்று சொல்வதற்காக தாய், தந்தையுடன் மதத்தை ஒப்பிடுவது மிக அபத்தமானது.

மதம் குறித்து என்னுடன் வாதிட்ட ஒருவர் "அத்தாட்சிப் பத்திரம் காட்டினால்தான் நீங்கள் உங்களுடைய அப்பா, அம்மாவை நம்புவீர்களா?" என்றெல்லாம் ஆவேசமாக கேள்வியை எழுப்பினார். இன்னொருவர் நான் அப்பாவையே மாற்றி விட்டேன் என்று மறைமுகமாக என்னுடைய தாயை வசைபாடினார். இப்படியானவர்களைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது.

இவ்வாறான கேள்விகளை மதவெறியுள்ளவர்களும் சிந்தனை வறட்சியுள்ளவர்களுமே கேட்பதால், அவர்களுக்கு உண்மையை புரிய வைப்பதும் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லோரும் நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாவது போன்று இவர்களுடைய இந்த மதமே "அப்பன் பேர் தெரியாதவன்" என்று இவர்களை சொல்வதுதான் இதில் வேதனையான வேடிக்கை.

எம்மவர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் செய்கின்ற பல முட்டாள்தனமான விடயங்களில் இறந்தவருக்கு திதி கொடுப்பதும் ஒன்று. என்ன செய்வது? பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது.

இப்பொழுது இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

இந்த மத்திரத்தின் அர்த்தம்:

என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாது என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம் என்று இந்த மந்திரம் சொல்கிறது. உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம், நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் என்று இந்த "புனித" மந்திரம் சொல்கிறது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள். இந்து மதம் தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் வஞ்சகம் வைக்கவில்லை. அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….

என்னுடைய அம்மா யாருடன் படுத்த என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.

உண்மையில் இந்த மந்திரம் அர்த்தம் அற்றது. தாய்க்கு கொடுக்கின்ற திதியில் தந்தை யார் என்ற கேள்வி எழத் தேவையில்லை. தந்தைக்கு திதி கொடுக்கின்ற போதாவது தாய் சோரம் போயிருந்து, அதனால் உண்மையான தந்தை வந்து விட்டால் என்னாவது என்ற கேள்வியோடு அந்த மந்திரத்தை தொடர்புபடுத்தலாம். ஆனால் தாயக்கு கொடுக்கும் திதியிலும் அவள் சோரம் போயிருக்கலாம் என்று சொல்வதற்கு அவசியமே இல்லை. ஆயினும் மந்திரம் அப்படித்தான் சொல்கிறது.

எந்த மதத்தை தாய், தந்தையோடு ஒப்பிட்டு உறுதியாக நம்புகிறீர்களோ, அந்த மதத்தின் சம்பிரதாயங்களே உங்களுடைய அம்மாவை "நம்பத்தகாதவள்" என்கிறது. நடத்தை கெட்டவளாக இருக்கலாம் என்கிறது. நீங்கள் வேறு அப்பனுக்கு பிறந்திருக்கலாம் என்கிறது. சம்பிரதாயம் என்று பிதற்றுபவர்களுக்கும், மதத்தை பெற்றோரோடு ஒப்பிடுபவர்களுக்கும் இதை விட வேறு கேவலம் ஏற்படப் போவதில்லை.

இந்த மந்திரங்கள் பற்றிய விவாதம் ஒன்றில் ஒருவர் என்னிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். "இந்த மந்திரங்களை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் தங்கள் வீட்டுப் பெண்களை கேவலப்படுத்துவது போன்று இல்லையா? பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?" இவ்வாறான கேள்விகளை அடுக்கினார்.

இங்கேதான் நாம் சில விடயங்களை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்த மந்திரங்களில் ஒரு விடயத்தை கவனித்திருப்பீர்கள். திருமண மந்திரங்கள் மணமகனை கொச்சைப்படுத்தவில்லை. மணமகளைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. ஈமச் சடங்கின் மந்திரங்கள் தந்தையை கொச்சைப்படுத்தவில்லை. தாயைத்தான் கொச்சைப்படுத்துகின்றன.

இப்படி மந்திரங்கள் பெண்களைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. இது ஏன்? இந்து மதத்திற்கு பெண்ணின் மேல் அப்படி என்ன வெறுப்பு? இனி இதற்கான காரணங்களைப் பார்ப்போம்
 

தொடரும்….
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP